டுவிட்டரில் வேலைசெய்துகொண்டு சவூதி அரேபியாவுக்காக உளவுபார்த்த நபருக்குத் தண்டனை.

டுவிட்டர் நிறுவனத்தில் வேலைசெய்த ஒருவர் அச்சமூகவலைத்தளத்தில் கணக்கு வைத்துக்கொண்டு சவூதிய அரசை விமர்சித்தவர்களைக் காட்டிக் கொடுத்ததற்காக நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டார். சவூதிய அரசகுமாரனின் உதவியாளருக்கு டுவிட்டர் பாவனையாளரின் விபரங்களை அந்த நபர் பரிமாறியிருந்தார்.

அஹமத் அபூஅம்மோ என்ற டுவிட்டரின் ஊழியர் அந்த நிறுவனத்தில் ஊழியம் செய்த சமயத்தில் சவூதிய அரசை அனாமதேயக் கணக்கு வைத்து டுவிட்டர் மூலம் விமர்சித்த நபரின் விபரங்களை டுவிட்டரில் பெற்று அவற்றைச் சவூதிய அரசுக்குக் கொடுத்தார். சவூதிய அரசகுடும்பத்தையும், அவர்களின் ஊழல்களையும் பல மில்லியன் ஆதரவாளர்களைக் கொண்ட குறிப்பிட்ட டுவிட்டர் பாவனையாளர் விமர்சித்து வந்திருந்தார். 

அபூஅம்மோ லெபனான், அமெரிக்கா ஆகிய நாட்டுக் குடியுரிமை கொண்டவர். 2014 இல் சவூதிய அரசகுமாரன் சார்பில் அவருடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. சவூதி அரசுக்காக உளவு பார்த்ததுக்காக லெபனானிலிருந்த தந்தையின் கணக்கில் சுமார் 300,000 டொலருக்கும் அதிகமான தொகையைச் சவூதிய அரசகுமாரன் ஊதியமாகக் கொடுத்திருந்தார். அத்துடன் மிக விலையுயர்ந்த கடிகாரத்தையும் முஹம்மது பின் சல்மானிடமிருந்து பெற்றிருந்தார். கலிபோனிய நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட அபூஅம்மோவுக்குச் சுமார் 10 – 20 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று குறிப்பிடப்படுகிறது.

அபூஅம்மோ 2015 இல் டுவிட்டர் நிறுவனத்திலிருந்து விலகியதாகக் குறிப்பிடப்படுகிறது. தொடர்ந்தும் சவூதி அரேபிய அரசுக்கு உளவு பார்ப்பதற்காகத் தனது சக ஊழியரொருவரை அபூஅம்மோ ஒழுங்குசெய்தார். அலி அல்ஸப்ரா என்ற அந்த ஊழியரும் உளவுக்குற்றத்துக்காகத் தேடப்படுகிறார். அவர் சவூதி அரேபியாவுக்குத் தப்பியோடிவிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ . போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *