காணாமல் போன சவூதியின் மனித உரிமைப் போராளி, அரச குடும்பப் பெண் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பஸ்மா பிந்த் சௌத் தனது மகள் ஸூஹுத் அல் ஷரீப் ஆகியோர் 2019 ம் ஆண்டு காணாமல் போய்விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அரச குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் சவூதியின் வர்த்தக சமூகத்தைச் சேர்ந்தவர்களுமாகும். ஆளும் அப்துல் அஸீல் அல் ஸாவுத் குடும்பத்தினரான பஸ்மா நாட்டின் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தும் வந்தார்.

சவூதி அரசு இவர்களிருவரையும் பற்றி இதுவரை வாய் திறந்ததே இல்லை. எவ்வித குற்றச்சாட்டுக்களோ, விசாரணைகளோ இன்றி மூன்று வருடங்கள் தடுப்புக் காவலில் இவர்களிருவரும் வைக்கப்பட்டிருந்தார்கள். 2020 இல் தனது சமூகவலைத்தளம் மூலமாக பஸ்மா தான் தடுப்புச் சிறையில் இருப்பதாகவும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

வெளியே வந்திருக்கும் அரசகுமாரி பஸ்மாவும் மகளும் ஜனவரி 6ம் திகதி ஜெட்டாவிலிருக்கும் தமது வீட்டுக்குத் திரும்பியிருப்பதாகவும், மருத்துவ உதவியை நாடியிருப்பதாகவும் அவர்களின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். 

நாட்டில் பெண்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பது பற்றிக் குரலெழுப்பிவந்த பஸ்மா சவூதிய அரசின் நிறுவனர் மறைந்த சாவுத்தின் கடைசி மகள் பஸ்மாவாகும். 2019 இல் அவர் காணாமல் போன சமயத்தில் அவர் தனது மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குப் போகத் திட்டமிட்டிருந்தார். அவரது வயது 57 ஆகும். அல் ஹாய்ர் சிறையில் தடுக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்