நோர்வே அரசு ஒரு முழு வரவுசெலவுத்திட்டத்துக்கான தொகையைச் சம்பாதிக்கப் போகிறது.
இந்த வருடத்தில் நோர்வே எரிபொருட்களின் விற்பனையால் வரும் இலாபத்துக்கு அறவிடும் வரிகள் மூலம் 177 பில்லியன் எவ்ரோவைச் சம்பாதிக்க முடியும் என்று கணிக்கப்படுகிறது. ரஷ்யா – உக்ரேன் போர் ஆரம்பிக்க முதல் நோர்வே அரசு அவ்வருமானம் சுமார் 28 பில்லியன் எவ்ரோவாக இருக்குமென்று கணித்திருந்தது.
எரிநெய் விலை மிகக் குறுகிய காலத்தில் பாய்ந்து குதித்திருக்கிறது. ஓரிரு வருடங்களுக்கு முன்னர் 20 டொலராக இருந்த கச்சா எண்ணெயின் விலை 130 டொலராகியிருக்கிறது. கடந்த வாரம் நோர்வே அரசின் எரிபொருட்கள் நிறுவனமான Petoro தனது மிகப்பெரிய இலாபத்தைப் பற்றிய அறிக்கையை வெளியிட்டது.
“சரித்திரம் காணாத இந்த இலாபத்தைப் பற்றிக் கூறி பெருமிதப்படவேண்டும் என்று என்னில் ஒரு பாகம் துடிக்கிறது. ஆனால், ஐரோப்பாவின் மீது சூழ்ந்திருக்கும் இருண்ட போர் மேகங்களைக் காணும்போது வேதனையாக இருக்கிறது,” என்று குறிப்பிட்டார் அந்த நிறுவன அதிபர் கிரிஸ்டீன் கிராக்சேத்.
“ஒரு அபத்தமான நிலபரம்,” என்று வர்ணித்தார் நோர்வேயின் எரிசக்தி அமைச்சர்.
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் எரிபொருட்களை வாங்குவதை நிறுத்தினால் போரினால் எரிவாயுக்குழாய்கள் சேதமடைந்தால் அல்லது ரஷ்யா ஐரோப்பாவுக்குத் தொடர்ந்தும் விற்கும் எரிபொருட்களை நிறுத்திவிட்டால் அதனால் நோர்வேயின் எரிசக்தி நிறுவனங்கள் பெரும் இலாபமடையும்.
இச்சமயம் எரிபொருட்களின் விற்பனையாகக் கிடைக்கும் அபரிமிதமான இலாபத்தை என்ன செய்வது என்ற சர்ச்சை தற்போது நோர்வேயில் உண்டாகியிருக்கிறது. அதில் ஒரு பகுதியை உக்ரேனை மீண்டும் கட்டியெழுப்புவதற்குக் கொடுக்கவேண்டும் என்கிறார்கள் ஒரு சாரார். நோர்வே அரசின் எரிபொருட்களால் வரும் இலாபத்தாலான நிதியின் முதலீடுகள் சர்வதேச பங்குச்சந்தை வீழ்ச்சியடையும் சமயத்தில் இழப்பால் தாக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்த இலாபத்தை நோர்வேக்குள்ளேயே வைத்திருக்கவேண்டும் என்பது எதிர்த்தரப்பாரின் வாதம்.
“எரிபொருட்களின் விலை படுவேகமாக உயர்ந்து வருவதால் நாம் இலாபமடைகிறோம். அதே சமயம் உலகப் பொருளாதார வீழ்ச்சியும், பங்குச்சந்தை வீழ்ச்சியும் எங்களுக்கு இழப்பைத் தருகிறது. கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது நாம் பெரிதாக எதையும் சம்பாதிக்கப்போவதில்லை. ஆனால், மற்றும் பல நாடுகளை விட எங்கள் நிலைமை நன்றாகவே இருக்கிறது,” என்கிறார் நாட்டின் வங்கியொன்றின் வர்த்தகக் கணிப்பு உயரதிகாரி.
சாள்ஸ் ஜெ. போமன்