இந்திய அளவில் அரசியலில் விமர்சிக்கப்படும் சினிமாவாகியிருக்கிறது, “The Kashmir Files.”

பாகிஸ்தான் பின்னணியுள்ள தீவிரவாதிகளின் ஆதரவுடன் திட்டமிட்டுக் கொல்லப்பட்டு வந்ததால், காஷ்மீர் பிராந்தியத்தில் இருந்து புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட் சமூகத்தினரைப் பற்றிய கதை “The Kashmir Files” ஆகும். சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் நடந்த அந்தச் சம்பவங்கள் தற்போதைய இந்துத்துவா கோட்பாட்டு பா.ஜ.க-அரசுக்கு வாகாக அமைந்திருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. விவேக் அக்னிஹோத்ரி என்பவரால் நெறிப்படுத்தப்பட்ட அந்தச் சினிமா சில பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பொழுதுபோக்கு வரிகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றது. அக்கட்சியைச் சேர்ந்த மாநில முதல்வர்கள் சிலர் அதை நேரடியாகப் பரிந்துரைத்தும் இருக்கிறார்கள்.

“சினிமாவில் சொல்லப்பட்டிருக்கும் விடயத்திலிருக்கும் உண்மைகளைக் கலையாகவும் பார்க்காமல் அதைத் தவறாகச் சித்தரித்து வருகிறார்கள் பலர். எனது கருத்து சினிமா பற்றியதல்ல. உண்மைகளை வெளியே கொண்டுவருவது எங்கள் தேசத்துக்கு நல்லது. அதன் மீதான பார்வை ஒரு சாராருக்கு ஒரு விதமாகவும் வேறு சிலருக்கு வெவ்வேறாகவும் இருக்கலாம். இந்தச் சினிமாவில் சொல்லப்பட்டது தவறென்ற பட்சத்தில் விமர்சிப்பவர்கள் வேறொரு சினிமாவை எடுக்கலாம், யார் அவர்களைத் தடுத்தது? நீண்ட காலமாக மறைக்கப்பட்ட உண்மை இப்போ வெளியில் வருகிறது என்பதே அவர்களுடைய பிரச்சினை,” என்று அந்தச் சினிமா பற்றிய விமர்சனங்களில் தனது கருத்தைக் குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

கேரளாவின் காங்கிரஸ் கட்சியோ சம்பவம் நடந்த காலம் ஆட்சியிலிருந்தது பா.ஜ.க-வின் ஆதரவான வி.பி. சிங் என்பதால் அது அவர்களுடைய தவறே என்கிறது. 1989 இல் வி.பி.சிங் அரசு பதவிக்கு வந்த அடுத்த மாதத்திலேயே காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் புலம்பெயர ஆரம்பித்தார்கள் என்றும் அதற்கு ஆதரவளித்தவர் அன்றைய கவர்னராக இருந்த ஆர்.எஸ்.எஸ்- அமைப்பின் ஜக்மோகன் தான் என்கிறது. 

1990-2007 காலகட்டத்தில் காஷ்மீரில் கொல்லப்பட்ட பண்டிட் இனத்தவரின் எண்ணிக்கை 399 என்றும் அதே காலத்தில் 15,000 காஷ்மீர் முஸ்லீம்கள் அங்கே கொல்லப்பட்டதாகும் குறிப்பிடும் கேரள காங்கிரஸ் காஷ்மீர் ஆவணங்கள் சினிமா பா.ஜ.க-வுக்குச் சாதகமாக இருப்பதால் அவர்கள் பண்டிட்டுகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *