வேறு பெற்றோருக்காகப் பெற்றெடுக்கப்பட்ட குழந்தைகள் உக்ரேனின் விநியோகத்துக்காகக் காத்திருக்கின்றன.
பிள்ளைகள் வேண்டிய பெற்றோர்களுக்காக வாடகைக்குக் குழந்தை பெற்றுக் கொடுத்தலில் [surrogate mothers] உலகில் முதலிடத்தில் இருக்கும் நாடு உக்ரேன் என்று குறிப்பிடப்படுகிறது. தனது நாட்டின் பெண்களை வெளிநாட்டவர் பிள்ளை பெறுதலுக்காக வாடகைக்கு எடுத்தலைச் சட்டப்படி அங்கீகரித்திருக்கும் ஒரு சில உலக நாடுகளில் உக்ரேன் முக்கியமானது. அப்படியாக உக்ரேன் பெண்கள் பெற்றெடுத்த சுமார் 20 குழந்தைகள் அதற்காகப் பணம் கொடுத்தவர்கள் வந்து பெற்றுக்கொள்வதற்காக குண்டுகளால் தாக்கப்படாத கட்டடங்களில் கியவ் நகரில் காத்திருக்கின்றன.
பெரும்பாலும் வெளிநாட்டுத் தம்பதிகள் தமக்குப் பிள்ளையில்லாததால் ஒரு பெண்ணின் உதவியுடன் பிள்ளையை உருவாக்கி அதைத் தமதாக்கிக்கொள்வார்கள். அதற்கான ஒப்பந்தத்துடன் உக்ரேன் பெண்களின் கருப்பையில் குறிப்பிட்ட தம்பதிகளுக்கான கரு பொருத்தப்படும். அதன் மூலம் சில பெண்கள் தமக்கான வருமானத்தைப் பெற்றுக்கொள்வதை உக்ரேன் அரசு அனுமதித்திருக்கிறது. வருடாவருடம் சில நூறு குழந்தைகள் இப்படியான வகையில் உக்ரேனில் பிறக்கின்றன.
உக்ரேன் சட்டப்படி அக்குழந்தைகளை உக்ரேன் நாட்டில் வந்து நேரடியாகக் குறிப்பிட்ட பெற்றோர் பெற்றுக்கொள்ளவேண்டும். குழந்தைகளின் நாடு, பின்னணி போன்ற விபரங்களைச் சட்டபூர்வமாகப் பதிந்துகொள்ளவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அப்படியாகக் குழந்தைகளைப் பெற்று கறுப்புச் சந்தையில் விற்காமலிருக்கவே அந்த ஏற்பாடு ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது. உக்ரேனின் ஏற்பட்டிருக்கும் போர் காரணமாக அக்குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அந்த நாட்டுக்குக் குறிப்பிட்ட தம்பதியர் வருவது ஆபத்தான காரியமாகியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்