நாஸிகளிடமிருந்து டென்மார்க் விடுதலை பெற்ற தினத்தில் டனிஷ் மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி செலன்ஸ்கி.

மே 4 ம் திகதி புதனன்று மாலையில் டென்மார்க் நகரச் சதுக்கங்களில் பொருத்தப்பட்டிருந்த பாரிய தொலைக்காட்சித் திரைகள் மூலம் டனிஷ் மக்களுடன் பேசினார் உக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கி. அவர்களை நேரடியாக விளித்துத் தனது நாட்டு மக்களுக்குப் போர்க்காலத்தில் டென்மார்க் கொடுத்துவரும் உதவிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாஸி ஜேர்மனியின் படைகள் ஏப்ரல் 1940 இல் டென்மார்க்குக்குள் நுழைந்தன. பெரும் கைகலப்பு எதுவுமின்றி டனிஷ் அரசு தான் சரணாகதி அடைந்ததாகத் தெரிவித்தது. டென்மார்க் தான் நடுநிலை நாடாக இருப்பதாகக் கூறி ஆரம்பத்தில் ஜெர்மனிய நேரடி ஆட்சியைத் தவிர்த்தது. 

அந்த நிலை ஆகஸ்ட் 1943 வரை தொடர்ந்தது. அந்த மாத இறுதியில் நாஸி அரசின் இராணுவத்தின் நேரடி ஆட்சியின் கீழ் டென்மார்க் கொண்டுவரப்பட்டது. ஜெர்மனி மீதான நேச நாடுகளின் வெற்றியின் பின்னர் டென்மார் மே 04 1945 இல் விடுதலை பெற்றது. 

வருடாவருடம் தமது நாட்டின் விடுதலை தினத்தில் டனிஷ்காரர்கள் தமது வீட்டுச் சாளரங்களில் ஒரு விளக்கை எரியவிடுவதுண்டு. அவர்களுடைய பாராளுமன்றத்தில் சமீபத்தில் பேசிய செலன்ஸ்கி, வரவிருக்கும் டனிஷ் சுதந்திர தினத்தைச் சுட்டிக்காட்டி “அன்றைய சுதந்திரப் போராட்ட வீரர்களை ஞாபகம் கொள்ளவும் ஒரு விளக்கை எரியவிடுங்கள்!,” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

தமது நாட்டின் விடுதலை தினத்தை ஞாபகத்தில் கொண்டு தம்மைப் பெருமைப்படுத்தித் தாம் செய்யும் உதவிகளைக் கௌரவப்படுத்திய செலன்ஸ்கியை டனிஷ் மக்கள் சிலாகித்தார்கள். செலன்ஸ்கியின் உரையைக் கேட்க நகரச் சதுக்கங்களில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட அவர்களின் கையில் உக்ரேன் கொடியும், ஒரு சுடரும் இருந்தன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *