அரை நூற்றாண்டு காணாத பணவீக்கப் பாதிப்பால், வேலைநிறுத்தம் செய்யும் பிரிட்டிஷ் போக்குவரத்து ஊழியர்கள்.

 சர்வதேசப் பிரச்சினையாக ஆகியிருக்கும் பணவீக்கம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக எதிர்கொள்ளப்படுகிறது. பிரிட்டனில் ஜூலை மாதப் பணவீக்கம் 10 %. 1980 களின் ஆரம்பத்துக்குப் பின்னர் இப்படியான விலையேற்றங்களைச் சந்திக்காத மக்கள் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பால் நெருக்கப்படுகிறார்கள். விளைவுகளிலொன்றாகப் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தங்களை நடத்தி வருகிறார்கள். அவற்றிலொன்றான ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் பிரிட்டனை வியாழனன்று ஸ்தம்பிக்க வைத்தது.

பிரிட்டனின் போக்குவரத்துத் துறையின் வெவ்வேறு பகுதியினரும் கோடைகாலம் முதல் அடையாள வேலைநிறுத்தங்களை அறிவித்து நடத்தியும் வருகிறார்கள். சனிக்கிழமையன்றும் இதேபோன்று ரயில் ஊழியர்கள் பெரும்பாலானோர் வேலை நிறுத்தம் செய்யவிருக்கிறார்கள். லண்டனில் பேருந்து மற்றும் நிலக்கீழ் ரயில் போக்குவரத்து ஊழியர்கள் வெள்ளிக்கிழமையன்று வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.

பத்தாயிரத்துக்கும் அதிகமான போக்குவரத்துத் தொழிலாளர்கள் தமது வேலைநிறுத்தங்கள் மூலம் தமக்கான ஊதியங்களை அதிகமாக்கவேண்டும், வேலைக்கான சூழல் மேம்படுத்தப்படவேண்டும் என்று கோரிவருகிறார்கள். 

ரயில், பேருந்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை அடுத்து கிழக்கு பிரிட்டனில் துறைமுகத்தில் தொழிலாளர்கள் எட்டு நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்யவிருக்கிறார்கள். ஞாயிறன்று அவர்கள் தமது நடவடிக்கையை ஆரம்பிக்கவிருக்கிறார்கள். அவர்களையடுத்து, பிரிட்டனின் தொழிற்சாலைகளின் வெவ்வேறு துறையிலிருப்பவர்களும் இலையுதிர்காலத்தில் வேலை நிறுத்தங்கள் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இங்கிலாந்தின் மத்திய வங்கி இவ்வருடம் பணவீக்கம் மேலும் அதிகரித்து 13 % ஐ எட்டும் என்று எச்சரித்திருக்கிறது. தொழிலாளர்கள் தமது ஊதியங்களை அதிகரித்துக் கொள்வது பணவீக்கத்தை மேலும் அதிகமாக்கும் என்று பொருளாதார வல்லுனர்களும், அரசியல்வாதிகளும் எச்சரிக்கிறார்கள். தொழிலாளர்களின் அமைப்புகளோ, தமது அங்கத்துவர்களின் “உண்மையான ஊதியம்” பல வருடங்களாகவே அதிகரிக்கவில்லை என்பதே தற்போதைய நிலைமைக்குக் காரணம் என்கிறார்கள்.

ரஷ்யாவின் உக்ரேன் மீதான போரால் அவர்களின் எரிபொருட்களுக்கும், தயாரிப்புகளுக்கும் உலகின் பல நாடுகள் தடை போட்டிருப்பதே சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருக்கும் விலையுயர்வுகளுக்குக் காரணம். எரிபொருட்களின் விலையுயர்வே சமீப மாதங்களில் பொருட்களின் விலையை உயரவைத்துப் பணவீக்கத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது. அடுத்து வரும் மாதங்களில் உலகின் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என்றே கணிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *