ஹமாஸ் இயக்கத்தின் சகல சிறகுகளையும் “தீவிரவாதிகள்” என்று ஐக்கிய ராச்சியம் பிரகடனம் செய்தது.

கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் பின்பு அறிவிக்கப்பட்டது போலவே 26 ம் திகதி வெள்ளியன்று ஐக்கிய ராச்சியம் ஹமாஸ் இயக்கத்தின் எல்லா அமைப்புக்களையும் “தீவிரவாதிகள்” என்று பிரகடனம் செய்திருக்கிறது. அந்த இயக்கத்திற்காக பிரச்சாரம் செய்வது, மிண்டு கொடுப்பது முதல் சகல ஆதரவுகளைச் செய்பவர்களும் கடுமையான சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். 

2001 ம் ஆண்டு முதலே பாலஸ்தீனாவின் காஸா பிராந்தியத்தில் ஆட்சி செய்துவரும் ஹமாஸ் இயக்கத்தின் இராணுவப் பிரிவு ஐக்கிய ராச்சியத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், ஹமாஸ் இயக்கத்தினரின் அரசியல், சமூகசேவை இயக்கங்களுக்கு அத்தடை இதுவரை ஐக்கிய ராச்சியத்தில் இருக்கவில்லை. அந்த இயக்கத்தின் எந்தச் சிறகாக இருப்பினும் அவர்களுடைய நடவடிக்கைகளை இராணுவ நடவடிக்கைகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்று ஐக்கிய ராச்சியம் தனது புதிய நகர்வுக்கான காரணமாகத் தெரிவித்திருக்கிறது.

ஐக்கிய ராச்சியத்தின் ஹமாஸ் தடையை இஸ்ராயேலும், அமெரிக்காவும் வரவேற்றிருக்கின்றன. பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் “ஐக்கிய ராச்சிய அரசு பாலஸ்தீனர்களின் விடுதலைக்கு எதிராக எடுத்த முடிவாகவே இது பார்க்கப்படுகிறது,” என்று காட்டமாகத் தெரிவித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்