ஜேர்மனியில் “சுதந்திரக் குடிமக்களுக்கு, வேகத்திலும் சுதந்திரம்” என்ற கோஷம் கேள்விக்குறியாக்கப்படுகிறது.

“ஆட்டோபாஹ்ன்” என்றழைக்கப்படும் ஜேர்மனியின் நெடுஞ்சாலைகளில் எவ்வளவு வேகத்தில் பயணிக்கலாம் என்பதற்கு எல்லையாக இருப்பது அவரவர் வாகனங்களில் உச்சவேக எல்லைதான். அச்சாலைகளில் அதிக வேகத்துக்கான எல்லை எதுவென்பதை முடிவுசெய்யக்கூடாது என்ற எதிர்ப்பு 1970 களில், “Freie Fahrt für freie Bürger” என்ற கோஷத்துடன் எழுந்ததால் அச்சாலைகளில் வேகக்கட்டுப்பாடு செய்யாமல் விட்டுவிட்டது அரசு.

[ஜேர்மனி முழுவதுக்குமாக மணிக்கு 130 கி.மீ தான் வாகனங்களுக்கான வேக எல்லை இருப்பினும் குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளில் அவ்வேகத்தை மீறுபவர்களைத் தண்டிக்கும் எண்ணம் இருந்ததில்லை.]

ஆனால், சமீபத்தில் சர்வதேச ரீதியில் எழுந்திருக்கும் காலநிலை மாற்றத்துக்கு எதிராக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை யோசிக்கும்போது வாகனங்களின் வேகத்துக்கும் அவை வெளியிடும் நச்சு வாயுக்களுக்குமான தொடர்பும் கவனிக்கப்படுகிறது. அதன் விளைவாக ஜேர்மனியின் ஆட்டோபாஹ்ன்களிலும் வேகத்துக்கு எல்லை போடப்படவேண்டுமென்ற கோரிக்கை 1970 களில் “வேக எல்லை கூடாது” என்பது போல எழுந்திருக்கிறது.

ஜேர்மனிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு 130 கிமீ வேகத்தை எல்லையாக நடைமுறைப்படுத்தினாலே வருடத்துக்கு 2 மில்லியன் தொன் கரியமிலவாயு வெளியேற்றலைக் குறைக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. சாதாரணமான ஒரு சிறிய ஆபிரிக்க நாடு வருடத்தில் 2 மில்லியன் தொன் கரியமிலவாயுக்குக் குறைவாகவே நச்சு வாயுவை வெளியேற்றுகிறது என்பதை ஒப்பீடாகக் கவனிக்கலாம்.

வேகத்தை அதிகரிக்க அதிகரிக்க வாகனம் வெளியேற்றும் நச்சு வாயுவின் அளவும் அதிகரிக்கிறது. நச்சு வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவேண்டுமென்று உலகளவில் குரலெழுப்பும் ஜேர்மனி தனது நெடுஞ்சாலைகளில் அளவில்லாமல் அதே நச்சுக்காற்றை வெளியேற்றுவது மற்றவர்களை ஏமாற்றும் நடத்தை என்கிறார்கள் வேகக்கட்டுப்பாட்டுக்காகக் குரல் கொடுப்பவர்களின் முக்கிய வாதங்களில் ஒன்றாகும். அவர்களுக்கு ஆதரவாக 40 % ஜேர்மனியர்கள் குரல்கொடுப்பதாக கருத்துக் கணிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. அவ்வாதரவு சமீப காலத்தில் வளர்ந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது.

ஆனால், புதியதாகப் பதவியேற்கவிருக்கும் ஜேர்மனிய அரசின் கட்சிகளுக்கிடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளில் நெடுஞ்சாலைகளில் வேகக்கட்டுப்பாடு என்பது ஒரு கட்டாயமான கோரிகையாக எந்தக் கட்சியாலும் முன்வைக்கப்படவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்