“ஜோர்ஜியர்கள் கொவிட் 19 ஆல் பாதிக்கப்படாத பிரத்தியேக மரபணுக்கள் கொண்டவர்கள்,” அமைச்சர்.

ஜோர்ஜியர்களுக்கு மட்டும் இருக்கும் பிரத்தியேகமான பாதுகாப்பான மரபணு அவர்களுக்குக் கொவிட் 19 தொற்றவிடாமல் பாதுகாப்பதால் அந்த நாட்டு மக்களுக்கு இரண்டு கொரோனாச் சான்றிதழ்கள் கொடுக்கப்படும் என்றும் அவைகளிலொன்று வாழ்நாள் முழுவதும் பாவிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்னர் நாட்டின் பிரதமர் இராக்லி கரிபாஷ்விலி, “ஒரு ஜோர்ஜியக் குடிமகன் கொவிட் 19 ஆல் எப்போதாவது பாதிக்கப்பட்டிருந்து குணமடைந்தால் அவருக்கு ஒரு பச்சைச் சான்றிதழ் வழங்கப்படும். எத்தனை காலத்துக்கு முன்னர் அது வந்திருந்தாலும் பரவாயில்லை,” என்று குறிப்பிட்டிருந்தார். அதைத் தெளிவுபடுத்தவே மக்கள் ஆரோக்கிய அமைச்சர் எக்கத்தரினா திக்கராட்சே “உள்ளுர் பாவிப்புக்காகக் கொடுக்கப்படும் பச்சைச் சான்றிதழ் உள்நாட்டில் எப்போதும் பாவிக்கப்படக்கூடியதாக இருக்கும், புதுப்பிக்க அவசியமில்ல,” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

அதேசமயம் சர்வதேசப் பயணங்களுக்காக இன்னொரு கொவிட் சான்றிதழ் சர்வதேசக் கட்டுப்பாடுகளுக்கு ஏற்றபடி வழங்கப்படும். ஏற்பட்டிருக்கும் உலக நிலைமைக்கேற்றபடி மக்கள் பழகிக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டபோதே, தனது நாட்டு மக்களுக்கு மட்டும் பிரத்தியேக கொவிட் 19 பாதுகாப்பு மரபணு இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்