ஆபத்தான ஆபிரிக்கத் திரிபு பெல்ஜியத்துக்குப் பரவியது!

ஏழு நாடுகளது வான் சேவைகளைஉடனடியாக நிறுத்தியது ஐரோப்பா!

உடனடியாக நிறுத்தியது ஐரோப்பா🔴

உலக பங்குச் சந்தைகளில் சரிவு ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டிருக்கும் கொரோனா வைரஸின் புதிய திரிபை”கவலைக்குரிய மாறுபாடு” (“variant of concern”) என்று தரப்படுத்தியிருக்கும் உலக சுகாதார நிறுவனம், அதற்குக் கிரேக்க இலக்கப் பெயர்களின் வரிசையில் “ஒமைக்ரோன்”(Omicron) என்று பெயர் சூட்டியிருக்கிறது. ஒமைக்ரோன் என்பது கிரேக்க எழுத்துக்களில் 14 ஆவது இலக்கத்துக்குரிய பெயர் ஆகும்.

புதிய வைரஸ் பற்றிய அச்சத்தால் ஆபிரிக்காவின் தெற்குப் பகுதி நாடுகளுடனான சகல விமான சேவைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் இடைநிறுத்தியிருக்கிறது.

போட்ஸ்வானா நாட்டில் முதலில் தோன்றியதாக நம்பப்படுகின்ற மிக வீரியமானவைரஸ் திரிபு தென் ஆபிரிக்கா உட்படஆறு நாடுகளில் பரவியிருக்கிறது. அங்கிருந்து உலகின் வேறு சில நாடுகளுக்கும்அது பாய்ந்திருக்கிறது. ஐரோப்பாவில் பெல்ஜியம் நாட்டில் முதல் தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளார் என்ற தகவலை அந்நாட்டின் சுகாதார அமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.இம்மாத ஆரம்பத்தில் எகிப்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கே ஆபிரிக்க வைரஸ் தொற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

மலாவி (Malawi) நாட்டில் இருந்து திரும்பிய தனது பிரஜை ஒருவர் புதிய ஆபிரிக்க வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார் என்ற தகவலை இஸ்ரேலும் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஹொங்கொங்நாட்டுக்கும் புதிய வைரஸ் பரவியுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே டெல்ரா வைரஸின் புதிய தொற்றலைகளில் சிக்கியுள்ள இந்தத் தருணத்தில் – டெல்ராவைவிடத் தீவிரமாகப் பரவக்கூடியது என நம்பப்படுகின்ற புதிய ஆபிரிக்க வைரஸ் பற்றிய செய்திகள் ஐரோப்பிய நாடுகளை உஷாரடைய வைத்துள்ளன.

தென் ஆபிரிக்கா,(South Africa)லெசோதோ(Lesotho), போட்ஸ்வானா(Botswana), ஷிம்பாப்வே (Zimbabwe),மொசாம்பிக் (Mozambique), நமீபியா (Namibie) மற்றும் சுவாஸிலான்ட் என அழைக்கப்படும் ஈஸ்வதினி(Eswatini)ஆகிய ஏழு நாடுகளில் இருந்துவருகின்றவிமானங்களை பிரான்ஸ் இடைநிறுத்தியிருக்கிறது. கடந்த 14 நாட்களுக்குள் இந்நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் எவராயினும் தங்கள் தகவல்களைச் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

போர்ப் பதற்றங்கள், பெரும் தீவிரவாதத்தாக்குதல்களின் போது உலக பங்குச்சந்தைகள் சரிவைச் சந்திப்பது வழக்கம்.இன்று ஆபத்தான ஆபிரிக்க வைரஸ் பற்றிய செய்திகள் வெளியானதை அடுத்து ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டிருக்கிறது.

பாரிஸ் CAC 40 பங்குச் சந்தைச் சுட்டெண் கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர் முதல் முறையாக 4.4% வீத வீழ்ச்சியைக் காட்டியுள்ளது. அமெரிக்கப்பங்கு நிலைவரமும் லேசான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

உலக நாடுகள் எங்கும் தற்சமயம் பரவிவருகின்ற டெல்ரா திரிபை தடுப்பூசிகள்40 சதவீதம் மட்டுமே எதிர்க்கின்றன என்றதகவல் சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஆபிரிக்காவைரஸ் திரிபு டெல்ராவை விடவும் தீவிரமாகப் பரவக்கூடியது எனச் சந்தேகிக்கப்படுவதால் அது தடுப்பூசிகள் அனைத்தையும் எதிர்த்துத் தவிடுபொடியாக்கி விடக்கூடும் என்ற அச்சம் மருத்துவ அறிவியலாளர்களிடம் உள்ளது. ஆனால் இந்த அச்சமும் அவசரப்பட்டு விதிக்கப்படும் பயணத் தடைகளும் “மிகையான” நடவடிக்கைகள் என்று வேறு சில தொற்றுநோய் நிபுணர்கள் கூறியிருக்கின்றனர்.

பிரிட்டன், பிரான்ஸ், சுவிஸ், இத்தாலி போன்ற நாடுகள் தென் ஆபிரிக்காவுக்கான வான் சேவைகளை அவசரப்பட்டுநிறுத்தியிருப்பதற்கு அந்த நாட்டின்சுகாதார அமைச்சர் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அச்சத்தைக் கிளப்பியிருக்கின்ற ஆபிரிக்கத் திரிபு, தடுப்பூசிகளை எதிர்க்கும் வலுவுடையதா என்பதைக்கண்டறியும் ஆய்வுகளை ஆரம்பிக்கப்போவதாக ‘பைசர் – பயோ என்ரெக்’ தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.பெறுபேறுகள் தெரியவருவதற்குச் சில வாரங்கள் எடுக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.