நத்தார் புதுவருட சமயத்தில் இந்தோனேசிய அரச, தனியார் ஊழியர்கள் விடுமுறையில் போகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

கொவிட் 19 ஆல் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த இந்தோனேசியாவில் தொற்றுக்கள், இறப்புக்கள் குறைந்து வருகின்றன. தடுப்பூசிகள் போடுவதில் அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. நிலமை மீண்டும் கையைவிட்டுப் போகாமலிருப்பதைத் தடுக்கும் நடவடிக்கையாக நத்தார், புதுவருடக் கொண்டாட்டச் சமயத்தில் கொரோனாக் கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது.

இந்தோனேசிய அரச ஊழியர்கள் மட்டுமன்றி தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கும் நத்தார், புதுவருட இடைவெளியில் விடுமுறை பெறுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. டிசம்பர் 24 – ஜனவரி 02 ம் திகதிவரை நகரங்களின் சதுக்கங்கள், கொண்டாட்ட இடங்களெல்லாம் மூடப்பட்டிருக்கும். குறிப்பிட்ட அந்த நாட்களில் எந்தவித கலை, கலாச்சார, சமய, விளையாட்டு வைபவங்களும் நடக்கலாகாது. உணவகங்கள் தமது இடத்தில் பாதி அளவுக்கே வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம்.

இதுவரை நடந்த பெரிய கொண்டாட்டச் சமயங்களில் நாட்டு மக்கள் அரசின் அறிவுரைகளைத் துச்சமாக மதித்து வந்ததால் அக்கொண்டாட்டங்களை அடுத்து நாட்டில் கொவிட் 19 பரவல் அதிகமாக இருந்தது. மருத்துவமனைகளில் நிறைந்து வழிந்தன. அப்படியான ஒரு நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்கவே வரவிருக்கும் கொண்டாட்ட நாட்களில் கட்டுப்பாடுகள் போட்டதாக இந்தோனேசிய அரசு தெரிவிக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்