இஸ்ராயேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பாலஸ்தீனர்களுக்குத் தடுப்பு மருந்து யார் கொடுப்பது?

உலகிலேயே முதல் முதலாகத் தமது நாட்டின் வயதுவந்தவர்களுக்கெல்லாம் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுத்த நாடு என்ற பெயரை வாங்கவேண்டும் என்ற ஆவேசத்துடன் இஸ்ராயேலில் தடுப்பு மருந்து கொடுப்பதை வேகமாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார் பிரதமர் நத்தான்யாஹு. ஆனால், இஸ்ராயேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பாலஸ்தீனர்களுக்குத் தடுப்பு மருந்து கொடுப்பது தமது கடமையல்ல என்பது இஸ்ராயேலின் நோக்கு.

காஸா பிராந்தியம், மேற்கு சமவெளிப் பிராந்தியங்கள் இஸ்ராயேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் என்று சர்வதேசத்தால் கருதப்படுபவை. அப்பகுதிகளில் வாழும் யூதக் குடியிருப்புகளில் இஸ்ராயேலியக் குடிகள் வாழ்கிறார்களென்றும், மீதிப்பேர் பாலஸ்தீனரென்றும் கணிக்கப்படுகிறது.

தற்போதைய தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படும் வேகத்தில் மார்ச் மாத இறுதிக்குள் இஸ்ராயேல் குடிமக்களில் தடுப்பு மருந்து கொடுக்கப்படவேண்டியவர்களுக்கெல்லாம் அது கொடுக்கப்பட்டுவிடும் என்று கணிக்கப்படுகிறது. ஆனால், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் யூதர்களுக்கு அருகே வாழும் பாலஸ்தீனர்கள் தவிர்க்கப்படுவார்கள். 

சுமார் 2.7 மில்லியன் பாலஸ்தீனர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கிறார்கள். இஸ்ராயேலியரிடையே கொவிட் 19 ஆல் ஏற்பட்டிருக்கும் இறப்பு விகிதம் 0.7 விகிதமாகவும் பாலஸ்தீனர்களிடையே 1.1 விகிதமாகவும் இருக்கிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் வாழும் பாலஸ்தீனர்களுக்கான தடுப்பு மருந்துகள் நான்கு நிறுவனங்களால் வழங்கப்படும் என்று குறிப்பிடப்படுகிறது. அது அங்கிருக்கும் 70 விகிதமான பாலஸ்தீனர்களுக்குப் போதுமானது. குறிப்பிட்ட தடுப்பு மருந்துகளில் ரஷ்யா மட்டும் இதுவரை தனது பங்கான 5,000 தடுப்பு மருந்துகளை வழங்கியிருக்கிறது. வறிய நாடுகளுக்குக் கொடுக்கப்படும் என்று குறிப்பிடப்படும் தடுப்பு மருந்துகளிலிருந்து மீதியானவை வரும். ஆனால், அவை எப்போது கொடுக்கப்படுமென்பது இதுவரை தெரியாது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *