2019 இல் ஜேர்மனிய அரசியல்வாதியைக் கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு.

ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியான வால்டர் லூபக் தனது வீட்டுத் தோட்டத்தில் வைத்துச் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். அரசியல் தஞ்சம் கோரி வருபவர்கள் பற்றிய வால்டரின் நிலைப்பாட்டினால் கோபமுற்ற ஒரு வலதுசாரி நிறவாதியே அக்கொலையைச் செய்தான்.

2015 இல் கஸ்ஸல் நகரில் வால்டர் நடத்திய ஒரு அரசியல் கூட்டத்தில் “அரசியல் தஞ்சம் கோரி வரும் மனிதர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது என்ற கோட்பாட்டை ஜேர்மனி கைவிட்டுவிடலாகாது,” என்று குறிப்பிட்டு வாதித்தார். குறிப்பிட்ட கூட்டத்தில் கொலைகாரன் இன்னொரு கூட்டாளியுடன் பங்கெடுத்திருந்தான். அவன் 1990 களிலேயே நிறவாதக் குற்றங்கள் சிலவற்றுக்காகத் தண்டிக்கப்பட்டவன். 2000 ம் ஆண்டின் நடுப்பகுதியளவில் ஜேர்மனியின் இரகசியப் பொலீஸ் அவன் இனிமேலும் பயங்கரச் செயல்களில் ஈடுபடக்கூடியவனல்ல என்று குறிப்பிட்டு அவன் மீதான கண்காணிப்பை நிறுத்தியிருந்தது.

வால்டர் கொலைசெய்யப்பட்டது ஜேர்மனியின் நவீன சரித்திரத்தில் நடாத்தப்பட்ட முதலாவது வலதுசாரி நிறவாத அரசியல் கொலையாகும். இதைத் தொடர்ந்து, இதே காரணத்திலான கொலைகள், மோசமான குற்றங்களும் ஜேர்மனியில் நடந்தேறியிருக்கின்றன. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *