தமிழோடு | கதைநடை

அன்று அதிகாலை “இன்றைக்கு தீர்த்தத்தொட்டி முருகன் கோவிலுக்கு போகலாமா?” என்றாள் என் மனைவி. பொதுவாக எப்போதும் அவள் என்னிடம் கோயிலுக்குப் போவது குறித்து பேசுவதில்லை. அவள் இப்படிக் கேட்டதும் ஏதோ மனச்சுமையில் இருக்கிறாள் என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சட்டென்று ஒத்துக் கொள்ளாமல் “திடீர்னு என்ன கோயிலுக்கு” என்றேன். “இல்லை போக வேண்டும் போல் இருக்கிறது” என்றாள். “சரி போகலாம் என்றேன்” இப்போது அவளது முகத்தில் ஒருவிதமான மலர்ச்சியை என்னால் பார்க்க முடிந்தது.

உடனே பிள்ளைகளுக்குத் தேவையான உணவுகளை எல்லாம் உடனடியாகத் தயார் செய்து அவர்களை பணிக்கு அனுப்பிவைத்தாள். இப்போது நாங்கள் கோவிலுக்கு தயாரானோம். “தேங்காய் பழம் வாங்கணும் என்றாள்” “எதுக்கு?” என்றேன். “பூசைக்கு” என்றாள். உடனே நான் “கோவிலுக்கு வரவில்லை” என்றேன். “ஏன்?” இது அவளின் கேள்வி. “கடவுள் என்பது பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள், அதை இங்கிருந்தும் வேண்டலாம். அதற்கு பூசை பழம் என்று வைத்து வேண்டுவது கடவுளை நாம் கோமாளியாக்குவதற்கு சமம்” என்றேன். “சரி போகலாம்” என்றாள். “எங்கே?” இது எனது கேள்வி. “கோவிலுக்கு” இது அவள். “தேங்காய்…” முடிப்பதற்குள் வேண்டாம் என்றாள். இருவரும் வண்டியில் கிளம்பினோம்.

தென்னை மரங்களும் வயல்வெளியும் சூழ்ந்த அருமையான பகுதியில் அமைந்திருந்தது ஆறுமுக நயினார் கோயில். இருவரும் கோவிலுக்கு முன்பாக வண்டியை நிறுத்திவிட்டு கோயிலை நோக்கிஅ சென்றோம். அருகில் ஒரு அம்மையார் பூ விற்பனை செய்து கொண்டிருந்தார். “பூ வாங்கலாமா? என்றாள். “உனக்குத்தானே வாங்கிக்கோ” என்றேன். “பூசைக்கு” என்றாள். “உனக்குக் கடவுள் கொடுப்பார்” என்றேன். அவள் ஒன்றும் சொல்லவில்லை. இப்பொழுது இருவரும் கோவிலுக்கு முன்பு சென்றோம். படியில் ஏற ஏற அவளின் முகத்தில் இருந்த இருக்கம் களைந்தது. ஒரு மலர்ச்சியான முகத்தை அப்பொழுது அவளிடம் நான் கண்டேன்.

இருவரும் படியில் ஏறி உள்ளே சென்றோம். உள்ளே நுழைந்ததும் அந்தக் கம்பீரமான குரல் என்னை என்னவோ செய்தது. என்னையும் அறியாமல் கருவரையை நோக்கிச் சென்றேன். என் செயலின் மாறுபாட்டை என்னவள் உணர்ந்துகொண்டாள். ஆம் என்னோடு அவளும் கருவறைக்குள் நுழைந்தாள்.

கருவறைக்குள் முருகன் சிலைக்கு முன்பாக ஒரு பெரியவர் அமர்ந்து கொண்டு முருகனை வேண்டி அழகு தமிழில் அருணகிரியாரின் திருப்புகழை பாடிக் கொண்டிருந்தார். அருணகிரியாரின் தமிழும், அதைப் பாடியவரின் குரலும் ஒருங்கே என்னுள் கலந்தது. பூசாரி சூடம் கொளுத்திய தட்டை இறை உருவின் முன்பாகக் காட்டி பின்பு எங்களை நோக்கி வந்தார். நான் பெரும்பாலும் கோவிலுக்கு பூசைக்குப் பணம் கொடுப்பதில்லை. அன்று என் மனைவி கையிலிருந்த இருபது உரூபாயை எடுத்து பூசைத் தட்டில் வைத்தாள். நான் எந்த மறுப்பும் சொல்லவில்லை. காரணம் பூசாரி அழகுத் தமிழில் வழிபாடு நடத்தினார்.

உடனே உள்ளே சென்ற பூசாரி சிலையின் கழுத்தில் உள்ள பூமாலையை எடுத்து வந்து தட்டில் பணம் வைத்தவர், வைக்காதவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்குமாக பூக்களைக் கொடுத்தார்.

“கொஞ்ச நேரம் வெளியில் உட்காரலாமா” என்றேன். சரியென்றள் மனைவி. இருவரும் கருவறைக்கு முன்பாக சம்மனமிட்டு அமர்ந்தோம். அங்கிருந்தபடியே பக்கவாட்டு சுவற்றைப் பார்த்தேன். இங்கு தமிழில் வழிபாடு நடத்தப்படும் என்று இருந்தது. அதுதான் உள்ளே நடக்கிறது போலும் என்று எண்ணியபடியே கருவறைக்குள் கண்களைச் செலுத்தினேன்.

முருகனை வேண்டிப் பாடிய அந்தப் பெரியவர் இப்பொழுது மண்டியிட்டவாறு முருகன் பற்றிய பாடல்களைப் பாடினார். பின்பு எழுந்து நின்றார். முருகன் பற்றிய திருவருட்பாவில் உள்ள பாடல்களை பாடத் தொடங்கினார். அந்தத் தமிழில் நான் கரைந்தேன். ஐந்து நிமிடம் வெளியில் உட்காருவோம் என்று சொன்னவன் பதினைந்து நிமிடம் வரை உட்கார்ந்து அந்தப் பெரியவரின் பாடல்களைக் கேட்டு பின்பு மெதுவாக எழுந்து வீட்டுக்கு கிளம்பினோம். “இன்றைக்கு மனம் மகழ்ச்சியாக இருக்கிறது” என்ற என் மனைவியிடம், கோயிலில் தமிழ்வழிபாட்டைக் கண்ட மகிழ்ச்சி எனக்குள்ளும் தான்” என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டேன்.

எழுதுவது : ச.ந.இளங்குமரன் , தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *