திருந்திய உள்ளங்கள்!| கதைநடை

இரவு மணி 11 புதுமனை புகுவிழா விற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பெரிய விழாவாக இல்லாமல் தன் குடும்பத்தார், நண்பர்கள் மட்டும் பங்கெடுத்துக் கொள்வதற்கான விழாவாக அது இருந்தாலும் வாசலில் போடப்பட்டிருந்த பந்தலில் வாழை மரங்கள் வரவேற்பதற்காக நின்று கொண்டிருந்தன. வண்ண வண்ண விளக்குகள் வீட்டை அலங்காரம் செய்தன.

பாரதியின் அண்ணன் தச்சுக் கழிக்கின்ற வேலையில் ஈடுபட்டிருந்தார். புதுமனை புகுவிழா வழிபாட்டுச் சடங்குகள் செய்வதற்காக அங்கே சென்றார் அறவாழி. அறவாழியைக் கண்டதும் அவரை அனைவரும் வணங்கி வரவேற்றனர். தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அந்த வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் சுற்றிக் காட்டிக்கொண்டே “எந்த இடத்தில் பூசை செய்ய வேண்டும் ஐயா” என்று பாரதி அறவாழியிடம் கேட்டாள். வழிபாடு நடத்துவதற்கான இடத்தைச் சொல்லிவிட்டு சுமார் ஐந்து நாள்களுக்கு முன்பாக பூசைக்காக வாங்கி வைக்கச் சொன்ன பொருள்களையும் சரியாக நான்கு மணிக்கெல்லாம் அந்த இடத்தில் வைக்கச் சொல்லிவிட்டு காலையில் 4 மணிக்கு வருவதாக விடைபெற்று அறைக்குச் சென்றார் அறவாழி.

அறவாழி நல்ல பகுத்தறிவுச் சிந்தனையாளர். வழிபாடு என்ற பெயரில் நடைபெறுகின்ற சில போலித் தனமான செயல்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த வழிபாட்டு முறைகளைக் கையில் எடுத்தவர். ஏமாற்றுத் தனங்களில் மாற்றம் வேண்டும், அதை யாராவது செய்யவேண்டும் என்று சொல்வதைவிட நாமே செய்தாலென்ன என்று எண்ணி திருமண விழாக்கள், புதுமனை புகுவிழா மணிவிழா உள்ளிட்ட மக்கள் வாழ்வியல் நிகழ்வுகளில் நடக்கின்ற விழாக்களை அறிவுசார் முறையில் நடத்தி வருகின்றார். இதற்காக இவர் யாரிடமும் நிறைந்த பணம் பெற்றுக் கொள்வதும் இல்லை. அவர்களாக என்ன கொடுக்கிறார்களோ அதை மட்டுமே ஏற்றுக் கொள்கிறார். சில இடங்களில் தன்னுடைய சொந்தக் காசைக் கூடச் செலவழித்து நிகழ்வினை நடத்திக் கொடுத்திருக்கிறார்.

தன்னுடைய அறையை அடைந்த அறவாழி கையில் இருந்த பையை அலமாரியில் வைத்துவிட்டு படுக்கச் செல்லும்போது இரவு 12 மணியை நெருங்கியிருந்தது. அறையில் இருந்த கட்டிலின் மேல் படுத்துக் கண்களை மூடினார்

இரவு முழுக்க உறக்கம் கொள்ளவில்லை. இந்த புதுமனை புகுவிழா நிகழ்வுக்காக அவரை அனுப்பி வைத்த அவரது நண்பர் மாதவன் பாரதியைப் பற்றி சொல்லிய சொற்கள் மனதை குடையத் தொடங்கின.

பாரதி சிறுவயதிலேயே கணவனை இழந்தவள். குடும்பத்தாராலும் சக மனிதர்களாளும் ராசி இல்லாதவள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவள். தான் பெற்ற இரண்டு குழந்தைகளுக்காகவே தன் வாழ்நாளை நீட்டித்துக் கொண்டு வருபவள். கணவனின் இறப்புக்குப் பின் பலராலும் கைவிடப்பட்ட பாரதி இந்த சமுதாயத்தில் தான் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முயன்று அரசுத்தேர்வில் வெற்றிபெற்று கல்வித் துறையில் பணியாற்றி வருபவள். எந்த சமுதாயம் தன்னை ஒதுக்கியதோ அதே சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழவேண்டும் என்ற வைராக்கியத்தில் புதிதாக வீடு கட்டி அந்த வீட்டின் விழாவிற்காகத் தான் அவரோடு பணிசெய்யும் மாதவன் மூலம் அறவாழி அழைக்கப் பட்டிருந்தார்.

அதி காலை 3-15 மணிக்கு எழுந்து தான் தங்கியிருந்த இடத்துக்கு அருகில் இருந்த தென்னந்தோப்பில், கிணற்றிலிருந்து பாய்துகொண்டிருந்த தண்ணீரில் குளிக்கத் தொடங்கினார். குழாயின் வழியாக வந்த நீர் வெதுவெதுப்பாக இருந்தது. மனம் மட்டும் விழா தொடர்பான நிகழ்வில் நினைத்துக் கிடந்தது. அறவாழி குளித்து முடித்துவிட்டு மீண்டும் அறையை அடைந்தார்.

வழிபாட்டுக்கு உரிய உடைகளைப் போட்டுக்கொண்டு பாரதியின் இல்லத்திற்குச் சென்றார். மாவிலைத் தோரணமோ, பூசைப் பொருள்களோ வழிபாட்டுக்கு உரிய இடத்தில் இல்லை. பாரதியின் மகன் அப்போதுதான் உள்ளே வந்தான். “தம்பி அம்மா எங்கப்பா” என்றார். “பால் வாங்கப் போயிருக்காங்கய்யா” என்றான் பாரதியின் மகன் செல்வம்.

செல்வம் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவன். நல்ல பண்பானவன் தன்னுடைய குடும்பத்தின் நிலையை நன்கு உணர்ந்தவன். “என்ன செய்யனும்யா” என்றான். பூசைப் பொருள்கள் பற்றிச் சொன்னதும் தான் எடுத்துவருவதாகச் சொன்னான். மேலே கொண்டு வரும்படி சொல்லிவிட்டு வழிபடும் இடத்திற்குச் சென்றார் அறவாழி.

கொஞ்ச நேரத்தில் பூசைப் பொருள்கள் மேலே வந்தன. “அப்பாவின் படம் இருக்கிறதா தம்பி” என்ற அறவாழியின் குரலுக்கு “ஆமையா கீழே இருக்கிறது” என்று பதில் சொன்னான் செல்வம். அவரது தந்தையின் படத்தை எடுத்து வருமாறு சொன்னார். செல்வம் தன் தந்தையின் படத்தைக் கொண்டு வந்து அறவாழியிடம் கொடுத்தான். தன் நண்பர்கள் துணையோடு அறையின் வாசலில் மாவிலை தோரணம் கட்டி முடித்தான். செல்வத்திடம் அனைவரையும் குளித்து புத்தாடை அணிந்துவருமாறு சொன்ன அறவாழியின் பேச்சுக்கு “சரி ஐயா” என்று செல்வம் விடைபெற்றான். அறவாழி பூசைக்குரிய பொருள்களையெல்லாம் ஒழுங்குபடுத்தினார். இப்போது அந்த அறை வழிபாட்டுக் கூடமாகத் திகழ்ந்தது.

சற்று நேரத்தில் குளித்து முடித்து புத்தாடையோடு பாரதியும், செல்வமும், தங்கை மலர்விழியும் உள்ளே வந்தனர். திகைத்து நின்றனர். கூடத்தில் கடவுள் படம் இல்லை மாறாக திருவள்ளுவர் படமும், பாரதியின் கணவர் பழனியின் படமும் மாலை சூட்டப்பட்ட நிலையில் அங்கே வைக்கப்பட்டிருந்ததே அவர்கள் திகைப்புக்குக் காரணம் என்பதை உணர்ந்துகொண்ட அறவாழி மெதுவாகப் பேசத் தொடங்கினார்.

“ஏனம்ம திகைப்பு, இப்படி உட்காருங்கள்” “இல்லையா வள்ளுவர் வழிபாடுதான் செய்வீர்கள் என்றுதான் மாதவன் ஐயா சொன்னார் ஆனால்…” என்று இழுத்தாள் பாரதி. “வாழ்வாங்கு வாழ்பவரே வானுரையும் தெய்வம் என்கிறார் வள்ளுவர். உங்கள் கணவரது வாழ்வு உங்களுக்கானதுதானே” என்றார்.

“எங்கள் குடும்பத்தைப் பொறுத்தமட்டில் எல்லாமே அவர்தான். நாங்கள் வழிபடுவதும் அவரைத்தான் எங்களுக்கான உயர்வை மட்டுமே எண்ணி வாழ்ந்தவர் அவர்” என உணர்வில் பொங்கினாள் பாரதி. ” “அதனால்தான் அவரை வழிபடும் இடத்தில் வைத்திருக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே வழிபாட்டுக்குரிய ஆயத்த வேலைகளச் செய்துகொண்டிருந்தார் அறவாழி.

அறையில் நிலவிய அமைதியைத் தொடர்ந்து தட்டில் வைக்கப்பட்டிருந்த மூன்று மாலைகளில் இரண்டை பாரதியின் மக்கள் செல்வத்திற்கும், மலர்விழிக்கும் பாரதியைச் போடச் சொன்னார் அறவாழி. பாரதியின் உறவினர்கள் ஒவ்வொருவராக வழிபாட்டு கூடத்திற்குள் நுழைந்தனர் சுமார் இருபதுக்கு மேற்பட்டவர்கள் கூட்டமாகச் சேர்ந்து விட்டனர்.

“அம்மா அப்பா வந்துட்டாங்களாப்பா” அறவாழியின் கேள்விக்கு வந்துட்டாங்கய்யா” என்றாள் பாரதி. பாரதியின் பெற்றோரை அழைத்து அவர்கள் கையில் மாலையைக் கொடுத்து இருவரும் சேர்ந்து உங்கள் மகளுக்கு மாலை போட்டு வாழ்த்துங்கள் என்று அறவாழி சொல்லவும் அனைவரது முகத்திலும் ஒருகனம் திகைப்பு மின்னல் பளிச்சிட்டது. எதையும் கண்டுகொள்ளாமல் “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா… உன்னுழைப்பில் உருவான வீடு, நீ பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு, உன் உழைப்பை மதிக்கிறோம், உன் பெருமையைப் போற்றுகிறோம் நீடு வாழ்க… நிறைவாழ்வு வாழ்க” என உங்கள மகளை வாழ்த்தி மாலையைச் சூட்டுங்கள் என்று அறவாழி சொல்ல மறுமொழி பேசாமல் மகளை வாழ்த்தி மாலைபோட்டனர் பெற்றோர்.

இச்செய்கையை சிறிதும் எதிர்பாராத பாரதியின் கண்கள் கலங்கத் தொடங்கின… பாரதியையும் மக்கள் இருவரையும் உறவினர்களை நோக்கி கும்பிட்டவாறு நிற்கச் செய்து வந்திருந்த உறவினர்கள் அனைவரிடமு முன்னமே வாங்கி வைத்திருந்த உதிரிப் பூக்களைக் கொடுத்து “அறமும், பொருளும், இன்பமும் எப்போதும் இவ்வீட்டில் நிறைந்திருக்க, இல்லத்து உரிமையர் பல்லாண்டு வாழ்க” என மலர்களைத் தூவி மும்முறை வாழ்த்தச் சொன்னார். அனைவரும் அவ்வாறே வாழ்த்தினர்.

நிகழ்வு நிறைவடைந்தது. பாரதியின் பெற்றோர் மகளையும் பேரக் குழந்தைகளையும் கட்டிப் பிடித்துக்கொண்டு “எங்களை மன்னித்துவிடும்மா. உன்னை ராசியில்லாதவள் என்று ஒதுக்கியது எங்கள் தவறுதான். உன்னை ஒதுக்கிய நாங்கள் அப்படியேதன் இருக்கிறோம். ஒதுக்கப்பட்ட நீதான் உயர்ந்து நிற்கிறாய். பெத்தவங்களாய் இருந்தும் பிள்ளையை ஒதுக்கிப் பெரும் பாவம் செய்த பாவிகள் நாங்கள்” என்று இருவரும் கதறியழ பாரதியும் பிள்ளைகளும் பேச வாயின்றி கண்ணீரில் மிதந்துகொண்டிருந்தனர்.

“பெண்பாவம் பொல்லாதது, பாவம் பாரதி சின்ன வயசிலேயே புருசன இழந்தவள நாமும் புண்படுத்திட்டோமே உங்க அம்மாவோட எங்களையும் மன்னிச்சிடுப்பா’ என்று வந்திருந்த உறவினர்கள் தங்கள் மனதுக்குள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர்.

” மாற்றம் என்பது சொல் அல்ல செயல். இளம் வயதில் கணவனை இழந்தது பாரதியின் குற்றமா? விதவைக்கு ஆசைகள் இருக்கக் கூடாதா? அவர்கள் சமுதாயத்தால் ஒதுக்கப்பட வேண்டியவளா? என்றால் இல்லை என்பதை இச்சமூகம் எப்போது உணரும். விதவையும் சராசரியான பெண்ணல்லவா?” என்று உள்ளூர எண்ணிக்கொண்டு அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினார் அறவாழி.

எழுதுவது : புலவர் ச.ந.இளங்குமரன்
நாகலாபுரம், தேனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *