வட துருவத்து வளங்களில் கண் வைத்தபடி இராஜதந்திரச் சுற்றுப்பயணமொன்றை ஆரம்பிக்கிறார் அந்தனி பிளிங்கன்.

ஜோ பைடன் பதவியேற்றபின் முதல் தடவையாக அமெரிக்க – ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்திக்கப்போகுமிடம் ரெய்க்காவிக், ஐஸ்லாந்து. 20 ம் திகதி நடக்கவிருக்கும் ஆர்டிக் கவுன்சில் மாநாட்டில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கெய் லவ்ரோவை பிளிங்கன் சந்திப்பார். அந்த மாநாட்டில் வட துருவப் பிராந்தியத்தைப் பேணுதல், அதன் பாதுகாப்பு ஒழுங்குகள் போன்றவைகளைப் பற்றி அதைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளுக்கிடையிலான உரையாடல் நடக்கும். 

காலநிலை மாற்றத்தினால் சமீப வருடங்களில் வேகமாக வெம்மையாகிவரும் ஆர்டிக் பிராந்தியம் அதன் வளங்களைக் கொத்திக்கொண்டு போக விரும்பும் அரசியல் கழுகுகளின் கவனத்துக்கும் இரையாகி வருகிறது. ரஷ்ய அரசு அங்கே தனது இராணுவப் பாதுகாப்பையும் அதிகரிக்கவிருப்பதாகச் சமீப காலத்தில் குறிப்பிட்டிருக்கிறது. டொனால்ட் டிரம்ப்பின் காலத்தில் வெளிப்படையாகவே கிரீன்லாந்தை வாங்குவது பற்றி அமெரிக்க ஆர்வம் தெரிவிக்கப்பட்டது.

மே 19 ம் திகதி மாலை ஆரம்பிக்கவிருக்கும் ஆர்ட்டிக் கவுன்சில் மாநாட்டில் பங்குபற்றும் பிளிங்கன் – லவ்ரோவ் நேரடிச் சந்திப்பு 20 திகதிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. சமீப காலமாக வாய்ச்சண்டை பிடித்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவும், ரஷ்யாவும் வட துருவப் பிரதேசத்தில் தம்மிருவருக்கும் இருக்கும் ஆர்வத்தை எப்படி ஒன்றுபடுத்திக்கொள்ளலாம் என்று பேசவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  

இந்தச் சுற்றுப்பயணத்தையொட்டி மே 16 ம் திகதியன்று டென்மார்க்கில் கால் பதித்திருக்கும் பிளிங்கன் அந்த நாட்டின் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்திவிட்டு அடுத்த நாள் ஐஸ்லாந்துக்குப் பயணமாவார். அங்கே அவர் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்.

வட துருவப் பிராந்தியத்தில் உலகின் முக்கிய நாடுகளுக்கு இருக்கும் பொருளாதார வள உறிஞ்சல் ஆசைகள் அங்கு சுற்றுப்புற சூழலைப் பாதித்து காலநிலை வெம்மையுறுதலை மேலும் மோசமாக்காமலிருக்கும்படி பேணுதல், அங்கே அமைதியைப் பாதுகாத்தல் ஆகியவை பிளிங்கனின் பேச்சுவார்த்தையில் முக்கிய நிலைப்பாடுகளாக இருக்கும் என்று அமெரிக்க அரசு அறிக்கையொன்று குறிப்பிடுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *