தனது உக்ரேன் ஆக்கிரமிப்புப் போரை எதிர்க்கும் ரஷ்யர்களைச் சாடினார் புத்தின்.
உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பித்த பின்னர் ரஷ்யாவின் வெவ்வேறு நகரங்களிலும் நடந்துவரும் போர் எதிர்ப்பு ஊர்வலங்கள், கூட்டங்களில் பங்குபற்றுகிறவர்களைக் கடுமையாகச் சாடியிருக்கிறார் ஜனாதிபதி புத்தின். தொலைக்காட்சி உரையொன்றை நிகழ்த்திய புத்தின் மேற்கு நாடுகளின் கைப்பொம்மைகளாக மாறி ரஷ்ய இராணுவத்தையும் அரசையும் விமர்சிப்பவர்களையும் ரஷ்ய விரோதிகள் என்று குற்றஞ்சாட்டினார்.
“தேசபக்தியுள்ள ரஷ்யர்களை இந்த நாட்டு மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள். தமது வாய்க்குள் தவறுதலாக நுழைந்துவிட்ட கொசுவைத் துப்புவது போலத் தேசவிரோதிகளை அவர்கள் கையாள்வார்கள். இப்படியான ஒரு சுய ஆய்வு இந்த சமூகத்துக்கு நல்லதே,” என்று புத்தின் குறிப்பிட்டார்.
“ரஷ்யாவிலிருக்கும் “ஐந்தாம் படையினரைத்” தூண்டிவிடுவதன் மூலம் நாட்டில் சமூகப் பிரச்சினைகளை உண்டாக்கவே மேற்கு நாடுகள் செயற்பட்டு வருகின்றன. அவர்களின் ஒற்றை நோக்கம் ரஷ்யாவை அழிப்பதே,” என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
‘நாடு பெரும் பிரச்சினைகளை நேரிடும் இச்சமயத்தில், தமது பதவிகளை விட்டுவிட்டுப் பல ரஷ்யர்களும் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள் என்றும் அவர்கள் தேசவிரோதிகளே என்று வியாழனன்று ரஷ்ய அரசு குறிப்பிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்