ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் ஆப்கானிஸ்தானில் சேவை செய்வதைத் தலிபான்கள் வரவேற்கிறார்கள்.

கடந்த வருடம் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து சர்வதேச உதவி அமைப்புக்கள் அந்த நாட்டுக்கான உதவிகளைப் பெரும்பாலும் நிறுத்திவிட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தொடர்ந்தும் அங்கே மனிதாபிமான உதவிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதைத் தொடர்வதாக வியாழனன்று நடந்த ஐ.நா-வின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தீர்மானித்திருந்தது.

ஆப்கானிஸ்தானில் உதவிகளைத் தொடர்வதற்கான தீர்மானத்தை நோர்வே முன்வைத்திருந்தது. அதை அச்சபையின் 14 அங்கத்தினர்களும் ஆதரிக்க ரஷ்யா மட்டும் வாக்களிக்காமல் ஒதுங்கிக்கொண்டது. 

“ஐக்கிய நாடுகள் சபையினரால் எங்கள் நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் மனிதாபிமான உதவிகளை நாம் வரவேற்கிறோம். எமது நாட்டு அபிவிருத்திக்கான ஒரு நல்ல நகர்வு அது. அந்த அதிகாரிகளுடன் ஒத்துழைக்க நாம் விரும்புகிறோம்,” என்று தலிபான்களின் சார்பில் ஸபியுல்லா முஜஹீத் வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.

ஐ.நா-வின் முடிவின்படி தொடர்ந்தும் அவர்கள் தலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. தலிபான்கள் ஒத்துழைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதியை ஏற்றுக்கொள்வது பற்றியும் ஐ.நா எதுவும் குறிப்பிடவில்லை. 

தலிபான்களின் ஆட்சி நிர்வாகத்தில் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் பிரச்சினை குறைந்திருக்கிறது. தீவிரவாதத் தாக்குதல்களும் அதன் விளைவுகளும் குறைந்திருக்கின்றன. பொதுவாக நாட்டின் நிலைமை பெருமளவு சீரழிந்திருக்கிறது. நாட்டின் சுமார் 38 மில்லியன் குடிமக்களில் பாதிப்பேர் கடும் வறுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஐ.நா-வின் அறிக்கை குறிப்பிடுகிறது. 

சிறுமிகளுக்கான பாடசாலைகள் திறக்கப்பட்டுச் செயற்படும் என்ற தலிபான்களின் அறிவிப்பு, தவிர, பெரும்பாலும் பெண்கள் மீது கட்டுப்பாடுகள் நாட்டில் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. உலக வங்கி சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்காக 1 பில்லியன் டொலர்களை மனிதாபிமான உதவியாகக் கொடுப்பதாக அறிவித்திருக்கிறது. அத்தொகை முழுவதுமே ஐ.நா-வின் ஊடாகவே பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *