உக்ரேனில் பரவலாக விரும்பப்படும் டெலிகிராம் செயலியை பிரேசில் பாவிப்பதை உச்ச நீதிமன்றம் தடை செய்தது.
உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புப் போரில் ரஷ்ய அரசினால் பொய்ச்செய்திகளைப் பரப்பாமல் இருக்க மக்கள் பெரும்பாலும் டெலிகிராம் என்ற செயலியைப் பாவிக்கிறார்கள். அதே செயலியையே பிரேசில் ஜனாதிபதி பொல்சனாரோ தனது ஆதரவாளர்களிடையே தனது அரசியல் நகர்வுகளுக்கு ஆதரவு பெறுவதற்காகவும் பாவித்து வருகிறார்.
பொல்சனாரோ பல சமயங்களிலும் தனது டெலிகிராம் இணையத்தளத்தில் பொய்ச் செய்திகளைப் பரப்புவதுண்டு. அவைகளை நீக்கும்படி பிரேசில் அதிகாரிகளும், நீதிமன்றங்களும் கேட்டுக்கொண்டும் டெலிகிராம் செயலி அதைச் செய்தாததால் அச்செயலியை பிரேசிலில் பாவிப்பதை நாட்டின் உச்ச நீதிமன்றம் தடை செய்திருக்கிறது.
“டெலிகிராம் பிரேசில் நாட்டின் சட்ட ஒழுங்கு விதிகளைப் பல தடவைகளிலும் மீறியிருக்கிறது. எண்ணமுடியாத அளவு நீதிமன்ற முடிவுகளை மீறியிருக்கிறது,” என்று தனது தீர்ப்புக்கான காரணத்தை உச்ச நீதிமன்றம் விளக்கியிருக்கிறது.
வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் வலதுசாரிக் கட்சியின் சார்பில் பொல்சனாரோ மீண்டும் போட்டியிடவிருக்கிறார். பதவியிலிருக்கும் அவர் நாட்டின் அதிகாரங்களைத் தனது தேர்தல் வெற்றிக்காகப் பாவித்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் நேரடியாகத் தாக்கி வருகிறார் பொல்சனாரோ.
ரஷ்யாவைப் பிறப்பிடமாகக் கொண்ட பாவல் டுரோவ் 2013 இல் டெலிகிராம் செயலியை நிறுவினார். டுபாயைத் தளமாகக் கொண்டு செயற்படும் அச்செயலியானது பிரேசிலின் சுமார் 53 % தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
“உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நாம் மனம் வருந்துகிறேன், பாவனையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நாம் நிச்சயமாக மேலும் நல்ல முறையில் சேவை செய்திருக்கலாம்,” என்று டுரோவ் தனது செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.
டெலிகிராம் செயலி தடைசெய்யப்படவேண்டுமென்ற தீர்ப்பானது, நாட்டின் அரசியல் மைதானத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவரும் என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். நாட்டின் பெரும்பான்மையினரின் தொடர்புச் சமூகவலைத்தளத்தை உச்ச நீதிமன்றம் தடை செய்திருப்பதாக ஜனாதிபதி பொல்சனாரோ தனது விமர்சனத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்