நோர்வேயில் நடந்துவரும் நாட்டோ போர்ப்பயிற்சிகளில் நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் இறப்பு.
நோர்வேயில் நடந்துவரும் நாட்டோ அமைப்பின் வருடாந்திரப் போர்ப் பயிற்சிகளில் சுமார் 30,000 இராணுவத்தினர் பங்குபற்றி வருகின்றனர். அப்பயிற்சிகளின் பகுதியான போர்விமானப் பயிற்சியின்போது நான்கு அமெரிக்க வீரர்கள் இறந்துவிட்டதாக நோர்வேயின் பிரதமர் டுவீட்டினார்.
Cold Response என்று பெயரிடப்பட்டிருக்கும் அப்பயிற்சிகளில், “எங்களுடைய நான்கு வீரர்கள் MV-22B Osprey பயிற்சியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தொன்றில் இறந்திருக்கிறார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்கிறோம்,” என்று அமெரிக்க இராணுவத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.
விமானமானது பயிற்சிகளை முடிந்து வட நோர்வேயிலிருக்கும் பூதோ நகரில் இறங்குவதற்காகப் பறந்துகொண்டிருந்தபோது பிராத்தெடாலன் என்றழைக்கப்படும் மலைப்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளாகியதாகத் தெரிகிறது. விபத்து ஏற்பட்டதற்கான காரணங்களெதுவும் தெரிவிக்கப்படவில்லை. அவைபற்றி விசாரிப்பதற்காக நோர்வேயின் அதிகாரிகள் சனியன்று விபத்து நடந்த பகுதிக்குச் சென்றிருக்கிறார்கள். காலநிலை மோசமாக இருப்பதால் அப்பிராந்தியம் முழுவதுமே முகில்களால் மறைக்கப்பட்டு இருளாக இருப்பதால் அவர்கள் விபத்து நடந்த இடத்தை இதுவரை நெருங்கமுடியவில்லை.
நடந்துவரும் நாட்டோவின் போர்ப்பயிற்சிகள் திட்டமிடப்பட்டது போலத் தொடரும் என்று நோர்வே அரசு அறிவித்திருக்கிறது. அது ஏப்ரல் 1 ம் திகதி நிறைவடையும்.
சாள்ஸ் ஜெ. போமன்