காற்றாடி விமானங்களை இயக்குபவர்களுக்கு இன்று [01.01.2021] முதல் புதிய வரையறைகள் அமுலுக்கு வருகின்றன.

 

டிரோன் எனப்படும் காற்றாடி விமானங்கள் பொழுதுபோக்கு இயந்திரங்களாக அறிமுகப்படுத்தப்பட்டவை. ஆரம்ப காலத்தில் விலையுயர்ந்தவையாகவும் ஒரு சில இயக்கங்களைச் செய்பவையாகவும் இருந்தன.

காற்றாடி விமானங்களின் தொழில்நுட்ப நுணுக்கங்கள் குறுகியகாலத்தில் பெரும் வளர்ச்சியடைந்துவிட்டன. உலக நாடுகள் பலவற்றிலும் இராணுவத் தாக்குதல்கள், வேவு பார்க்கும் கருவிகளாகவும், வர்த்தகத் துறையில் ஒருவருக்குத் தேவையானதை அவர் வீட்டுக்குக் கொண்டுசென்று தரும் இயக்கம் போன்றவைகளிலும், பொலீசார் போக்குவரத்தைக் கண்காணிக்கவும், குற்றங்களைக் கண்காணிக்கவும், சினிமா, பொழுதுபோக்கில் உயரத்திலிருந்து படங்களை எடுத்துவருவதிலும் உட்பட பலவித காரியங்களிலும் இச்சிறு விமானங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். 

தனியாரும் இப்படியான காற்றாடி விமானங்களைப் பாவித்து குற்றச்செயல்களுட்பட பல செயல்களைச் செய்யலாம், மற்றைய துறைகளுக்குக் குறுக்கீடாக இருக்கலாமென்ற நிலைமை உண்டாகி ஓரிரு வருடங்களாகிவிட்டது. எனவே ஆங்காங்கே நாடுகளில் வெவ்வேறு சட்டங்கள் அவ்வப்போது இவைகளின் பாவிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டு வந்தாலும் பெரும் பிராந்தியரீதியான சட்டங்கள் ஏதும் அமுலுக்கு இதுவரை வரவில்லையென்றே குறிப்பிடலாம்

ஐரோப்பிய ஒன்றியத்தினுள் தனியாருக்காக வரவிருக்கும் புதிய சட்டங்கள் படங்களெடுக்கக்கூடிய காற்றாடி விமானங்களெல்லாவற்றுக்கும் ஒன்றானது. [மிகவும் சில விளையாட்டு விமானங்கள் மட்டும் தவிர்க்கப்படுகின்றன.] 

காற்றாடி விமானங்கள் ஒவ்வொன்றும் அதற்கான திணைக்களத்தில் பதிப்படவேண்டும். கடையில் வாங்கும்போதே அது செய்யப்பட்டு விடுவதால் [வாகனக் கொள்வனவு போல] ஒவ்வொரு காற்றாடி விமானத்துக்கும் அதற்கான அடையாளமொன்று கொடுக்கப்படுகிறது. 

காற்றாடி விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படும் உயரம் 150 மீற்றரிலிருந்து 120 ஆகக் குறைக்கப்படுகிறது. 

விமானத்தைச் செலுத்துபவர் ஒவ்வொருவருக்கும் ஒரு சாரதிப் பரீட்சை வைக்கப்படும். அவைகள் 40 கேள்விகளைக் கொண்டவையாக இருக்கும்.

250 கிராம் முதல் 25 கிலோ வரையிலான காற்றாடி விமானங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்து அவைகளில் ஒன்று மட்டும் எந்த ஒரு தனியாரும் பாவிக்கப்பட அனுமதிக்கப்படும். மற்றவை வெவ்வேறு தொழில்துறைகளில் பாவிக்கப்படக்கூடியவை. தொழில்துறைகளுக்கான கட்டுப்பாடுகள் வேறானவை.

ஐக்கிய அமெரிக்காவில் அமுலுக்கு வரும் காற்றாடி விமானங்களும் ஒவ்வொன்றும் தனித்தனி அடையாளங்களுடன் வாங்குபவருடைய அடையாளத்துடன் பதியப்படும்.

பறக்கும் உயரக் கட்டுப்பாடு கொண்டுவரப்படுவதுடன் குறிப்பிட்ட பிராந்தியங்களில் இரவு நேரத்தில் பயன்படுத்த குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் பிரத்தியேக அனுமதி கொடுக்கப்படும்.

காற்றாடி விமானங்களைப் பாவித்து நிறுவனங்கள் தனியாருக்கான பொருட்களை அவரவரிடம் சேர்ப்பிப்பதற்கான அனுமதிகள் பரவலாகக் கொடுக்கப்படும்.

காற்றாடி விமானங்களின் பாகங்களெதுவும் மனித உடலில் காயங்கள் ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கலாகாது என்பது தயாரிப்பாளர்கள் மீது கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடாகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *