ஞாயிறன்று அமெரிக்காவின் ஹுரோன் குளத்தின் மேலே ஒரு எண்கோணப் பொருள் சுட்டு விழுத்தப்பட்டது.

அமெரிக்காவின் வான்வெளியில் அனுமதியின்றிப் பறந்த சீனாவின் பலூன்கள் சுட்டு விழுத்தப்பட்டதைத் தொடர்ந்து மேலும் பல பொருட்கள் தமது வானில்  பறப்பதாகக் கூறி அமெரிக்கா அவைகளைத் தமது போர் விமானத்தின் மூலம் சுட்டு விழுத்தியது. முதலில் சுட்டு விழுத்தப்பட்ட பலூன் ஆராய்ச்சிக்காகவே அனுப்பப்பட்டதாகச் சீனா குறிப்பிட்டு தனது அதிருப்தியையும் வெளியிட்டது. ஆனால், கடந்த வாரத்தில் சுட்டு விழுத்தப்பட்ட மற்றைய பொருட்கள் என்ன, எவரால் அனுப்பப்பட்டவை என்று விபரமெதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இத்தருணத்தில் பெப்ரவரி 12 ம் திகதி ஞாயிறன்று ஹுரோன் குளத்தின் மேலே ஒரு எண்கோணப் பொருள் சுட்டு விழுத்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. அதே நாளில் சீனாவும் தனது வானில் அடையாளம் தெரியாத பொருளொன்று பறப்பதாகவும் அதைச் சுட்டு விழுத்தத் தயாராகுவதாகவும் குறிப்பிட்டிருந்தது. அமெரிக்காவில் இதுவரை நாலு பொருட்கள் ஒரே வாரத்தில் சுட்டு விழுத்தப்பட்டிருக்கின்றன.

வானத்தில் சுமார் 6,100 மீற்றர் உயரத்தில் பறந்த குறிப்பிட்ட பொருள் இராணுவத் தாக்குதல் நடத்தும் சக்தியற்றது, ஆனால், விமானப் போக்குவரத்துக்கு இடையூறானது என்றும் அது கண்காணிக்கும் உபகரணங்களைக் கொண்டிருக்கலாம் என்றும் அமெரிக்க சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஷங்டோங் பிராந்தியத்தில் ஷிங்டாவோ நகரின் மேலே அடையாளம் தெரியாத பொருளொன்று பறந்ததாகக் குறிப்பிட்டு அதைச் சுட்டு விழுத்தியதாகச் சீனா பின்னர் தெரிவித்தது. அப்பகுதியில் வாழும் மீனவர்கள் வானத்திலிருந்து விழும் துகள்கள் பற்றியும் எச்சரிக்கப்பட்டனர். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *