அமெரிக்கா முழுவதற்கும் ஒரே விதமான கருக்கலைப்பு உரிமை வழங்கும் மசோதா செனட் சபையில் தோற்கடிக்கப்பட்டது.

 அமெரிக்காவில் சமீப வாரங்களில் எழுந்திருக்கும் கருக்கலைப்பு ஒரு பெண்ணின் தனிப்பட்ட மனித உரிமையா என்ற அரசியல் சர்ச்சைக்கான போர் நாட்டின் செனட் சபையில் நடந்தபோது அதைக் கொண்டுவந்த டெமொகிரடிக் கட்சியினர் தோல்வியைத் தழுவினர். சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் தனி மனிதர்களின் கருக்கலைப்பு உரிமையைப் பறிக்கக்கூடிய சட்டங்களை மாநில அரசுகள் கொண்டுவரலாகாது என்று தீர்ப்பளித்திருந்தது. அத்தீர்ப்பை நாடெங்கும் சட்டமாக்க ஜோ பைடனின் டெமொகிரடிக் கட்சியினர் அதை மசோதாவாக்கிச் செனட் சபையில் முன்வைத்திருந்தனர்.

கருக்கலைப்பு உரிமை பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரமுன் ஒக்லஹோமா மாநிலம் கடும் கட்டுப்பாடு. – வெற்றிநடை (vetrinadai.com)

செனட் சபையில் முன்வைக்கப்பட்ட அந்த மசோதாவுக்கான வாக்கெடுப்பில் 51 – 49 என்ற ஆதரவு மட்டுமே கிடைத்ததால் அது தோற்கடிக்கப்பட்டது. மேற்கு வெர்ஜினியாவின் டெமொகிரடிக் கட்சி செனட்டர் ஜோ மன்சின் ரிபப்ளிகன் கட்சிக்காரருடன் சேர்ந்து அதை எதிர்த்து வாக்களித்ததால் டெமொகிரடிக் கட்சியினருக்குத் தமது கட்சி வாக்குகள் எல்லாமே கிடைக்கவில்லை. இத்தீர்மானத்துக்கு 60 ஆதரவு வாக்குகள் கிடைத்தாலே சட்டமாகும் என்ற நிலைமையில் இது தோல்வியடையும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டதாகும்.

தோல்வியடையும் என்று தெரிந்தும் டெமொகிரடிக் கட்சியினர் அந்த மசோதாவை முன்வைத்தது தமது வாக்காளர்களுக்கு, “நாம் கருக்கலைப்பு என்பது ஒரு பெண்ணின் தனி மனித உரிமை என்பதை ஆதரிக்கிறோம்,” என்று காட்டுவதற்கேயாகும். 

ஜூன் மாதத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு உரிமை பற்றிய ஒரு வழிகாட்டல் தீர்ப்பை வழங்கவருக்கிறது. அதன்படி பழமைவாதிகளான ஆறு நீதிபதிகளில் ஐந்து பேர் கருக்கலைப்பு உரிமையைப் பறிக்கக்கூடிய விதமான தீர்ப்பை வழங்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது தெரியவந்ததிலிருந்து அமெரிக்காவில் பல பாகங்களிலும் கருக்கலைப்பு உரிமை பற்றிக் கோரிப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

பெரும்பாலான போராட்டங்கள் ஒரு பெண் தனது உடல் பற்றிய முடிவை எடுப்பது அவளது தனி மனித உரிமை என்பதற்கு ஆதரவானவையாகும். அதே சமயம் கருக்கலைப்பு என்பது ஒரு உயிரைக் கொல்வதாகும் என்று குறிப்பிட்டு அதைத் தடுக்கவேண்டும் என்று கோருபவர்களும் கொடி தூக்கியிருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *