உக்ரேனுக்கு இராணுவ உதவிகளைக் கொடுக்க மறுத்து வருகிறது பல்கேரியா.
ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் உக்ரேனுக்குப் பல வழிகளிலும் உதவி செய்து வருகின்றன. ஆரம்பத்தில் ஒதுங்கிக்கொண்டாலும் படிப்படியாக உக்ரேன் அரசுக்கான போர்த் தளபாடங்கள் அடங்கிய இராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. நாட்டோ அங்கத்துவ நாடான பல்கேரியா தாம் உக்ரேன் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை மட்டுமே செய்யத் தயாராக இருப்பதாக மீண்டும் தெரிவித்திருக்கிறது.
“ரஷ்ய அரசின் படு மோசமான ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் உக்ரேன் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை இந்தச் சமயத்தில் நாம் எம்மாலியன்றவரை செய்வோம். போர்ப் பிராந்தியத்துக்கு அருகேயிருக்கும் நாம் இந்தச் சமயத்தில் உக்ரேனுக்கான இராணுவ உதவிகளைச் செய்யத் தயாராக இல்லை,” என்று பல்கேரியாவின் பிரதமர் கிரில் பெட்கோவ் தெரிவித்தார்.
அமெரிகாவின் பாதுகாப்பு அமைச்சர் பல்கேரியாவில் தனது இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட சமயத்தில் பல்கேரியாவிடமிருந்து உக்ரேனுக்கு இராணுவ உதவியை ஒழுங்குசெய்ய முற்பட்டபோதே பல்கேரியப் பிரதமர் அதை மறுத்திருக்கிறார். அதேசமயம், நாட்டோ அமைப்பின் அங்கத்துவராகத் தாம் நடத்து அந்த அமைப்பால் ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டிருக்கும் இராணுவத்தினரின் ஒரு பகுதியினர் பல்கேரிய இராணுவத்தினருடன் சேர்ந்து செயற்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சரும், பல்கேரியப் பிரதமரும் சந்தித்த இடத்தைச் சுற்றி பல்கேரியர்கள் பலர் சூழ்ந்திருந்தனர். அவர்களிடையே ஒரு சாரார் ரஷ்யாவுக்கு ஆதரவான கோஷத்தைப் போட்டுக்கொண்டிருந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்