ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தடைபோட்ட உக்ரேன் ஜனாதிபதியும், போருக்கெதிராகக் குரல் கொடுத்தவர்களைக் கைது செய்த புத்தினும்.

வியாழனன்று இரவு தொலைக்காட்சியில் தோன்றித் தனது மக்களுக்கு நிலைமை பற்றி உரையாற்றினார் உக்ரேன் ஜனாதிபதி விளாமிடிர் செலின்ஸ்கி. வழக்கக்கத்தை விட வித்தியாசமாக இராணுவப் பச்சை நிற டி-சேர்ட்டை அவர் அணிந்திருந்தார். நாட்டின் 18 – 60 வயதுக்கிடையேயான ஆண்களெவரும் நாட்டை விட்டு வெளியேறலாகாது என்று அவர் உத்தரவிட்டார்.

“எங்கள் நாட்டின் தலைவிதியை எங்கள் இராணுவத்தினரும் நாங்களுமே முடிவுசெய்யவேண்டிய நிலையிலிருக்கிறோம். நாம் ரஷ்யாவுக்குப் பயப்பிடவோ அவர்களின் தலைமையுடன் பேசவோ போவதில்லை,” என்று குறிப்பிட்ட அவர் ரஷ்யப் படைகள் தலைநகருக்குள் நுழைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

நாட்டின் சாதாரண மக்களெவரும் வெளியே நடமாடவேண்டாமென்று கேட்டுக்கொண்ட செலின்ஸ்கி இரவு பத்து முதல் காலை ஏழு மணிவரை முடிந்தவரை பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி கேட்டுக்கொண்டார். 18 – 60 வயதுக்கிடையேயான ஆண்களெவரையும் நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 10,000 உக்ரேனியர்கள் போரில் பங்குகொள்ள தமது விருப்பத்தைத் தெரிவித்துக்கொண்டனர்.

உக்ரேனை அதன் வெவ்வேறு எல்லைகளிலிருந்தும் ஒரே நேரத்தில் தாக்கிக்கொண்டிருக்கும் ரஷ்ய இராணுவத்தினால் சுமார் 137 பேர் கொல்லப்பட்டதாகவும் 300 பேர் காயப்பட்டிருப்பதாகவும் அந்த நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 100,000 பேர் தமது வீடுகளிலிருந்து வெளியேறிப் பாதுகாப்பான இடங்களை நாடியிருக்கிறார்கள்.

ரஷ்யா வியாழனன்று தமது இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட தாக்குதல் வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டது. சுமார் 50 க்கும் அதிகமான நகரங்களில் சில ஆயிரம் மக்கள் வீதிக்கு வந்து போருக்கு எதிரான ஊர்வலங்களை நடத்தினார்கள். வியாழனன்று காலையிலேயே உத்தியோகபூர்வமான செய்திகள் தவிர்ந்த எதையும் பிரசுரிக்கலாகாது என்று ரஷ்ய தணிக்கைக் குழு உத்தரவிட்டிருக்கிறது. போர் பற்றிய விமர்சனங்களும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. எதிர்ப்பு ஊர்வலங்கள் பொலீசாரால் கலைக்கப்பட்டதுடன் சுமார் 1,700 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்