புத்தினுக்கு நெருக்கமான ரஷ்ய தேசியவாதியின் மகளைக் கொன்றதாக உக்ரேன் பெண் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

அரசியலில் புத்தினுக்கு நெருக்கமானவராக இருந்துவரும் அலெக்சாந்தர் டுகின் என்பவரின் மகள் சனியன்று மாலை மொஸ்கோவில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட தாரியா டுகின் தனது தந்தையின் காரில் சென்றபோதே அதில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் இறந்தார். அக்குண்டு அலெக்சாந்தர் டுகினைக் குறிவைத்திருக்கலாம் என்ற கணிப்பில் அதைச் செய்தது உக்ரேன் உளவு அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணே என்று ரஷ்யா குற்றஞ்சாட்டியிருக்கிறது.

டுகினும் அவரது மகளும் ரஷ்யாவின் தேசியவாதிகளாகும். அலெக்சாந்தர் டுகின் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளையெல்லாம் ரஷ்யா கைப்பற்றவேண்டும் என்ற அரசியல் கோட்பாடுள்ளவர். பத்திரிகையாளர் என்று குறிப்பிடப்படும் அவரது அரசியல் நிலைப்பாடுகளே புத்தினின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளுக்கு வித்தாக இருந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டு வருகிறது.

அலெக்சாந்தர் டுகின் பல தடவைகள் ரஷ்யாவின் உக்ரேன் மீதான நடவடிக்கைகளில் காட்டம் போதாது என்று குறிப்பிட்டு வந்திருக்கிறார். அதனாலேயே அவரை உக்ரேனின் உளவு அமைப்பு குறைவைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தான் பயணமாக இருந்த வாகனத்தை அவர் கடைசி நேரத்தில் மகள் தாரியாவிடம் கொடுக்கவே அவர் அதில் பயணித்தார். 

ரஷ்யாவின் உளவு அமைப்பு தனது இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கும் விபரங்களின்படி நத்தாலியா பவ்லோவ்னா வொவ்க் என்ற உக்ரேனின உளவு அமைப்பைச் சேர்ந்தவரே அந்தக் குண்டு வைப்புக்குப் பின்னால் இருந்தவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அலெக்சாந்தர் டுகினோ அவரது மகளோ தாம் குறிவைப்பவர்களல்ல என்று உக்ரேன் வெளிவிவகார அமைச்சு தனது மறுப்பைத் தெரிவித்திருக்கிறது. அலெக்சாந்தர் டுகின் தனது மகளின் மரணம் பற்றி இதுவரை கருத்துகள் எதையும் வெளியிடவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *