ஸ்கொட்லாந்தை அடுத்து வேல்ஸ் மாநிலமும் பிள்ளைகளுக்கு அடிப்பதைத் தடை செய்தது.
ஐக்கிய ராச்சியத்தின் இங்கிலாந்து, வட அயர்லாந்து பகுதிகளில் தொடர்ந்தும் அனுமதிக்கப்படும் “அளவான தண்டனை,” [“reasonable punishment”] என்ற பெயரிலும் இனிமேல் பிள்ளைகள் மீது கைவைப்பது வேல்ஸ் மாநிலத்தில் சட்டத்துக்கு எதிரானதாகும். உலகின் 60 நாடுகளைப் போல வேல்ஸிலும் இன்று [21.03] முதல் பிள்ளைகளை அடிப்பது, தட்டுவது, பிடித்து உலுப்புவது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும். ஸ்கொட்லாந்தில் இச்சட்டம் 2020 இல் கொண்டுவரப்பட்டது.
வயது வந்தவர்கள் மட்டுமல்ல இனிமேல் குழந்தைகளும் இன்னொருவரால் “தாக்குதலுக்கு” உள்ளாகாமல் இந்தச் சட்டம் பாதுகாக்கிறது. வேல்ஸ் பிராந்தியத்தில் வாழ்பவர்கள் மட்டுமன்றி அப்பகுதியில் தற்காலிகமாக விஜயம் செய்பவர்களையும் இச்சட்டம் அடக்குகிறது. அத்துடன், வயது வந்தவர் அருகிலில்லாத நிலையில் குழந்தைகளுக்கும் அதே பாதுகாப்புக் கிடைக்கிறது.
“ஐக்கிய நாடுகளின் குழந்தைகளுக்கான பட்டயம், தீங்கு விளைவிப்பதில் இருந்தும், காயப்படுத்தப்படுவதிலிருந்தும் குழந்தைகள் பாதுகாக்கப்படுவதற்கு உரிமை உண்டு என்கிறது, இதில் உடல் ரீதியான தண்டனையும் அடங்கும் என்றும் தெளிவுபடுத்துகிறது. அந்த உரிமை இப்போது வேல்ஸ் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளது – இனி அவ்விடயத்தில் தெளிவற்ற பகுதிகள் இல்லை, ‘அளவான தண்டனை’ என்று சொல்லி அவர்களை அடிப்பவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அது கடந்த காலத்துக்குரியது,” என்று வேல்ஸ் முதலமைச்சர் மார்க் டிரேக்போர்ட் இதுபற்றிப் பெருமையுடன் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்