நாஸாவின் முதலாவது விண்வெளிப் பயணத்தின் புகைப்படங்கள் டென்மார்க்கில் ஏலம் விடப்படுகின்றன.
1960 – 1970 க்கும் இடையில் அமெரிக்க விண்வெளித் திணைக்களமான நாஸா சந்திரனுக்கு அனுப்பிய அப்பலோ விண்வெளிக் கப்பல்களின் விஜயங்களில் எடுக்கப்பட்ட 74 புகைப்படங்கள் டென்மார்க்கில் கொப்பன்ஹேகனில் ஏலத்துக்கு விடப்படுகின்றன. அப்படங்களின் விற்பனை சுமார் 205,000 டொலர்களை எட்டும் என்று கணிக்கப்படுகிறது.
1969 ஜூலை 20 ம் திகதியன்று அப்பலோ விண்கலம் சந்திரனை அடைந்தபோது எடுக்கப்பட்ட படங்கள் ஏலம் விடப்படும் படங்களில் மிக முக்கியமானவை என்று குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு புகைப்படமும் தனிதனியாக ஏலம் விடப்படும்.
அப்படங்களில் ஒரு பகுதி இதுவரை நாஸாவின் கோப்புகளில் மட்டுமே இடம் பெற்றிருந்தவையாகும். மற்றவை வெவ்வேறு சஞ்சிகைகளில் வெளியாகியிருக்கின்றன. 1968 டிசம்பரில் அப்பலோ 8 சந்திரனைச் சுற்றிக்கொண்டிருந்தபோது விண்வெளி வீரர் வில்லியம் ஆண்டர்ஸ் பூமியை எடுத்த படம் அதிக விலைக்குப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு நபரே இப்படங்களை ஏலத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார். அப்படங்களில் சந்திரனில் எடுக்கப்பட்ட 26 படங்களும், சந்திரனை நெருங்கியும் கூட விண்வெளிக்கலத்தில் ஏற்பட்ட கோளாறுகளால் திரும்பிவந்த அப்பலோ 13 எடுத்த படங்களும் அடங்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்