சிறுகோள்கள் ஏதாவது பூமியுடன் மோதாமல் தடுக்க முடியுமா என்று பரிசோதிக்கும் விண்கலம் கிளம்பியது

விண்வெளியில் பறந்துகொண்டிருக்கும் விண்கற்கள்\சிறுகோள்கள் ஏதாவது ஒன்று சமீபகாலத்தில் இல்லாவிடினும் என்றாவது ஒரு நாள் பூமியில் மோதலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. மோதுவதால் ஏற்படும் விளைவுகள் எப்படியிருக்கும், அதைத் தடுக்க முடியுமா போன்ற கேள்விகளுக்குப் பதில்களைத் தேடுமுகமாக விண்கலமொன்றை இன்று, ஏவிவிட்டது நாஸா.

DART[ Double Asteroid Redirection Test] என்ற நாஸாவின் விண்கலம் விண்வெளியின் சுற்றுப்பாதையொன்றில் சுற்றிக்கொண்டிருக்கும் டிடிமோஸ் என்ற சிறுகோளையும், அதன் இணையாக அதைச் சுற்றிவரும் டைமர்போஸ் என்ற மதியையும் குறிவைக்கவிருக்கிறது. Didymos இன் ஆரை 780 மீற்றர். அதன் இணை Dimorphos இன் ஆரை 160 மீற்றர் ஆகும். இன்னும் 10 மாதங்களில் அது டிடிமோஸின் மீது மோதும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

டிடிமோஸ் சுற்றிவரும் விண்பாதையை, DART ஐ அதன்மீது மோதுவதன் மூலம் மாற்ற முடியுமா, அதன் விளைவு டைமர்போஸை என்ன செய்யும்? போன்ற கேள்விகளுக்கு விடையைத் தெரிந்துகொள்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். நாஸாவின் விண்கலம் 500 தொன் எடையுள்ளது. டிடிமோஸோ பல மில்லியன் தொன் எடையுள்ளது. 

எடையில் பெருமளவு வித்தியாசமுள்ள இவைகளின் மோதலின் விளைவுகளை அறிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் பிரத்தியேக தொலைநோக்கிகள் மூலம் கண்காணிப்பார்கள். நாஸாவின் விண்கலம் சிறுகோளை மோதும் வேகம் மணிக்கு சுமார் 24,000 கி.மீ ஆக இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்