அன்னை சக்தியின் ஐம்பத்தியொரு சக்திபீடத் தோற்றம்

அன்னையின் அங்கங்கள் நம் பாரத தேசத்தில் விழுந்த இடங்கள் சக்திபீடத்
தலங்களாக,புண்ணிய பூமியாக விளங்குகின்றன என்று சொல்லப்படுகிறது.

தட்சன் என்னும் பெயர் கொண்ட அரசன் சிவபெருமானை குறித்து கடும்தவம் இருந்தான்.
அவனுடைய தவத்திற்கு இரங்கி வந்த பிறை சூடிய பெருமான் என்ன வரம் வேண்டும் என்று அவனிடம் கேட்டார். அப்போது பெருமானே!
தாங்கள் எனக்கு மருமகனாக வரவேண்டும் அதுவே நான் விரும்பி வேண்டும் வரம், என்று அவன் பதிலளித்தான். கேட்டதை கேட்டபடியே கொடுக்கக் கூடிய சிவபெருமான் “அவ்வாறே ஆகட்டும்” என்று அருளி மறைந்தார்.

பரமேஸ்வரனின் இந்த வரத்தின் காரணமாக “தாட்சாயணி” என்ற பெயரில் தட்சனுக்கு ஒரு மகள் தோன்றினாள். இறைவனின் வரம் காரணமாகத் தோன்றிய அந்த தாட்சாயணியை சீரும் சிறப்புமாக வளர்த்து சிவபெருமானுக்கு மணமுடித்துக் கொடுத்தான் தட்சன்.

சிவபெருமான் தனக்கு மருமகனாக வரவேண்டும் என்று தட்சன் கேட்டது உண்மையான அன்பின் காரணமாக அல்ல. மும்மூர்த்திகளின் முதல்வனாகிய சிவபெருமான் மருமகன் ஆக்கிக் கொண்டால் அனைவரும் தனக்கு கட்டுப்பட்டவர்களாக ஆகி விடுவார்கள். என்கிற எண்ணத்தின் காரணமாகவே அவன் அந்த வரத்தை கேட்டான். அனைத்தும் அறிந்த சர்வேஸ்வரனுக்கு இது தெரியாமல் போகுமா? தாட்சாயினியை மணம் முடித்ததும் தேவியை அழைத்துக் கொண்டு கயிலாயம் சென்று விட்டார் சிவபெருமான்.

தன்னிடம் எதுவும் கூறாமல் தாட்சாயினி கயிலாயம் அழைத்துச் சென்றதைத் தனக்கு நேர்ந்த பெரும் அவமதிப்பாகக் கருதினான் அந்த தட்சன். சர்வலோகத்திற்கும் அதிபதியாக சிவபெருமான் தனக்கு மருமகனாக்கிக் கொண்டு மற்றவர்களை ஆட்டிப் படைக்கலாம் என்று அவன் அகந்தை கொண்டதே எண்ணிப் பார்க்காமல் ஆண்டவன் மேலே கோபம் கொண்டான்.

அதன் காரணமாக ஒரு யாகத்தினை தொடங்கிய தட்சன் அனைத்துத் தேவர்களுக்கும் யாகத்திற்கான அழைப்பினை அனுப்பிவிட்டு அகிலாண்ட நாயகனான ஆதிசிவனுக்கு அழைப்பு அனுப்ப மறுத்தான்.
அன்னை தாட்சாயினி எடுத்துக் கூறிய அறிவுரைகளை ஏற்காமல் அவமதித்தான்.
அதன் விளைவாக சர்வேஸ்வரன் கோபத்தில் இருந்து வீரபத்திரரும், தாட்சாயணியின் கோபத்திலிருந்து காளியும் தோன்றினார்கள். அவ்விருவரும் சேர்ந்து கொடியவனான தட்சனின் யாகத்தை துவம்சம் செய்து அழித்தார்கள்.
தட்சனின் தலை கீழே உருண்டது.
கொடியவன் தட்சனின் மகள் என்று மற்றவர்கள் கூறுவதை விரும்பாத தாட்சாயினி தங்கள் உடலினை தீக்கிரையாக்கினாள். அவ்வாறு தீயிலே கருகிய தேவியின் உடலினை தன் தோள் மீது தாங்கிய சிவபெருமான் ருத்திர தாண்டவம் ஆடினார். அவர் ஆடிய ஆட்டத்தின் காரணமாக அனைத்து லோகங்களும் நடுக்கம்
கொண்டன.


அதனைக் கண்ட திருமால் சிவபெருமானின் ஆட்டத்தினை நிறுத்தும் பொருட்டு நிறுத்தும் பொருட்டு தன்னுடைய சுதர்சனச் சக்கரத்தை ஏவினார்.
சுழன்று வந்த அந்த சுதர்சனச் சக்கரம் அன்னை தாட்சாயணியின் அங்கத்தை பல கூறுகளாகச் சிதைத்தது.

அந்தக்கூறுகள் அனைத்தும் பாரத தேசத்தின் பல பகுதிகளிலும் பரவலாக விழுந்தன. ஐம்பத்தியொரு இடங்களில் அன்னையின் உடல்கள் தனித்தனியாக விழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
அந்த ஐம்பத்தியொரு இடங்களுமே அன்னையின் சக்தியின் ஐம்பத்தியொரு திருக்கோயில்களாக சக்தி பீடங்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எழுதுவது ; மா.நந்தினி
ஆய்வியல் நிறைஞர் (தமிழ் )சேலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *