நோர்வேயின் நார்விக்கில் மாட்டிக்கொண்ட ரஷ்யப் தனவந்தரின் உல்லாசப்படகு ஒரு வழியாக அங்கிருந்து வெளியேறுகிறது.
சர்வதேச ரீதியில் புத்தினுக்கு நெருக்கமான பெருந்தனவந்தர்கள் பலரின் சொத்துக்கள் முடக்கப்பட்டன. அவர்களின் உல்லாச வீடுகள், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. புத்தினுக்கு நெருங்கியவராக இருப்பினும் முடக்கல்களுக்கு ஆளாகாத சிலரும் ஆங்காங்கே பெரும் தொல்லைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். அப்படி மாட்டிக்கொண்டவர்களில் ஒருவர் முன்னாள் கே.ஜி.பி உத்தியோகத்தர் விளாமிதிர் ஸ்திரல்கொவ்ஸ்கி ஆகும்.
67 வயதான ஸ்திரல்கொவ்ஸ்கியின் 68 மீற்றர் நீளமான உல்லாசப்படகு Ragnar நோர்வேயின் வட முனையிலிருக்கும் நார்விக் நகரின் துறைமுகத்தில் மாட்டிக்கொண்டது. இவர் தற்போதைய செய்ண்ட் பீட்டர்ஸ்பர்க் முன்பு ஸ்டலின்கிராட் ஆக இருக்கும்போது அங்கே புத்தினுடன் பணியாற்றிய உளவாளியாகும். கனிவள நிறுவனமொன்றுக்குச் சொந்தக்காரரான ஸ்திரல்கொவ்ஸ்கி புத்தினுக்கு நெருக்கமானவர் என்று குறிப்பிடப்பட்டாலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட தனவந்தர்களில் ஒருவரல்ல.
தடைகளுக்குட்பட்டவர்களின் பட்டியலில் இல்லாதவரென்றாலும் ஸ்திரல்கொவ்ஸ்கிக்கு எரிபொருட்களை விற்பனை செய்ய நார்விக் நகர நிறுவனங்களெல்லாம் மறுத்துவிட்டன. சுமார் 70 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அப்படகின் தலைமை மாலுமி முன்னாள் பிரிட்டிஷ் கடற்படை உத்தியோகத்தர் ரொப் லங்காஸ்டர். லங்காஸ்டரும் அவருடைய ஊழியர்களும் கூட அங்கேயே பல வாரங்கள் தங்கவேண்டியதாயிற்று.
இறுதியில் ஒரு வழியாக இவ்விடயத்தில் நோர்வேயின் மீன்வளத்துறை அமைச்சர் தலையிட்டார். தடைக்கு உள்ளாகாத ஒரு நபரை முடக்கி வைத்திருப்பது சரியல்ல என்று நிலைமையைச் சமாளித்து ரக்னார் படகுக்குத் தேவையான எரிபொருளை விற்கும்படி நகர வினியோகஸ்தர்களிடம் கேட்டுக்கொண்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்