சர்வதேச டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி ஓய்வுபெறப்போவதாகச் சொல்லி அதிரவைத்திருக்கிறார்.

தனது 25 வது வயதில் 15 சர்வதேச வெற்றிகளைப் பெற்றுவிட்ட ஆஷ்லி பார்ட்டி [Ashleigh Barty] உலக டென்னிஸ் வீராங்கனைகளில் தற்சமயம் முதலிடத்தில் இருப்பவர். இரண்டே மாதங்களின் முன்னர் Australian Open பந்தங்களில் விளையாடிக் கோப்பையைக் கைப்பற்றியிருக்கும் அவர் இளவயதில் தனது விளையாட்டுத் திறமையின் உச்சத்திலிருக்கும்போதே ஓய்வுபெறப்போவதாக அறிவித்தமை டென்னிஸ் உலகத்தைத் திடுக்கிட வைத்திருக்கிறது.

“டென்னிஸ் விளையாட்டை நேசிப்பதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன், அது என் வாழ்க்கையின் ஒரு பெரிய பகுதியாகும்.  எனது வாழ்க்கையின் அடுத்த பகுதியை ஆஷ் பார்ட்டி என்ற சாதாரண மனிதராக அனுபவிப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்,” என்று தனது முடிவுக்கு அவர் காரணம் தெரிவித்திருக்கிறார்.

ஆஷ் பார்ட்டி டென்னிஸ் விளையாட்டிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தது முன்னரும் நடந்திருக்கிறது. அது 2014 இல் ஆகும். 18 வயதான அத்தருணத்தில் போட்டியொன்றில் அதிருப்தியடைந்து அவர் விலகிக்கொண்டு 2016 ம் ஆண்டுவரை போட்டிகளில் பங்குபற்றவில்லை. 2016 இல் திரும்பி வந்து முக்கிய போட்டிகளில் விளையாட ஆரம்பித்த அவர் படுவேகமாக முன்னேற ஆரம்பித்திருந்தார்.

இப்போது எடுத்திருக்கும் முடிவு முன்னரைப் போன்றதல்ல என்று குறிப்பிட்டிருக்கிறார் அவர். “டென்னிஸ் விளையாட்டு என்னுடைய பல கனவுகளை நிறைவேற்றி அதற்கு மேலேயும் பல நல்லவைகளை எனக்குக் கொடுத்திருக்கிறது. இனிமேல் நான் என்னுடைய மற்றக் கனவுகளை வேட்டையாடப்போகிறேன்,” என்கிறார் ஆஷ்லி பார்ட்டி.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *