டென்னிஸ் நட்சத்திரமாய் மிளிர்ந்த போர்ஸ் பெக்கருக்கு 2.5 வருடச் சிறைத்தண்டனை!

ஆறு தடவைகள் Grand Slam என்ற டென்னிஸ் விளையாட்டின் சிகரத்தை வென்றெடுத்தவர் ஜெர்மனிய வீரர் போரிஸ் பெக்கர். அவர் 2017 இல் தனது கடன்களைக் கட்ட முடியாமல் நீதிமன்றத்தின் மூலம் திவாலானதாகப் பிரகடனம் செய்துகொண்டார். அச்சமயத்தில் அவர் பல மில்லியன்கள் பெறுமதியான சொத்துக்களை மறைத்து வைத்திருந்ததற்காக லண்டன் நீதிமன்றமொன்று அவருக்கு 2.5 வருடச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

ஒரேயொரு டென்னிஸ் வீரர் சர்வதேசத்தின் மிக முக்கியமான நான்கு டென்னிஸ் போட்டிகளிலும் ஒரே வருடத்தில் வெற்றியெடுப்பது Grand Slam எனப்படும். அதை ஆறு தடவைகள் வெற்றியெடுத்த போரிஸ் பெக்கர் மேலும் 49 போட்டிகளிலும் வெற்றியெடுத்தவராகும். 1997 இல் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.

தனது நிறுவனத்தின் பெயரில் 2010 இல் அவர் வாங்கிய சுமார் 7 மில்லியன் டொலரைக் கட்டமுடியாமல் 2017 இல் திவாலானதாக அறிவித்தார். ஆனால், பல மில்லியன்கள் பெறுமதியான சொத்துக்களையும், தனது பெறுமதியான வெற்றிக்கோப்பைகளையும் மறைத்து வைத்திருந்தது பின்னர் தெரியவந்தது. அதற்காக அவர் ஏற்கனவே ஜெர்மனியிலும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

லண்டன் நீதிமன்றத்துக்கு தனது துணைவியுடனும் மகனுடனும் வந்த அவருக்கு அவர்கள் முன்னிலையிலேயே அச்சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன் பாதியை அனுபவித்த பின்னரே அவருக்கு ஒருவேளை கட்டுப்பாடுகளுடன் வெளியே வரலாம்.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *