மெல்போர்னில் டென்னிஸ் வீரர் யோகோவிச்சுக்கு ஆதரவுக் குரலெழுப்பும் விசிறிகள்.

ஆஸ்ரேலியாவில் நடக்கவிருக்கும் சர்வதேச டென்னிஸ் பந்தயப் போட்டிகளில் பங்குபற்ற அந்த நாட்டுக்கு வந்திறங்கி கொவிட் 19 கட்டுப்பாடுகளால் தடுக்கப்பட்டிருப்பவர்களில் நோவாக் யோக்கோவிச் முக்கியமானவர். ஏற்கனவே ஒன்பது தடவைகள் அந்தக் கோப்பையை வென்ற அவர் அப்ப்பந்தயங்களில் பங்குபற்றி ஒரு தடவையேனும் தோற்றதில்லை.

தற்போது உலகின் ஆண் டென்னிஸ் வீரர்களில் முதலாவது இடத்திலிருப்பவர் யோக்கோவிச். செர்பியாவைச் சேர்ந்த அவர் கொவிட் 19 தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்ள மறுத்து வருபவர்களிலொருவர். பயிற்சிப் போட்டிகள் வைத்துப் பங்குகொண்டு அவ்வியாதியால் தொற்றுக்கும் உள்ளானார். ஆயினும், தொடர்ந்தும் அத்தடுப்பு மருந்தை எடுப்பது கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்துக் குரல்கொடுத்து வருகிறார்.

ஆஸ்ரேலியாவோ தனது நாட்டுக்குள் நுழைபவர்கள் கொவிட் 19 தடுப்பூசி எடுக்காத பட்சத்தில் அதற்கு ஒரு மருத்துவக் காரணம் காட்டினாலே உள்ளே விடுவோமென்ற கடுமையான எல்லைக்காவல் சட்டத்தைப் போட்டிருக்கிறது. அங்கே நடக்கவிருக்கும் பந்தயப் போட்டிகளில் பங்குபற்றுகிறவர்களுக்கும் அதே கட்டுப்பாடே நிலவுகிறது.

தான் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளாதிருக்க மருத்துவக் காரணம் கொண்ட சான்றிதழுடன் யோக்கோவிச் ஆஸ்ரேலியாவுக்கு வந்திறங்கியதாக அவர் குறிப்பிடுகிறார். அதனால், அப்போட்டிகளில் விளையாடத் தான் அனுமதிக்கப்படுவார் என்று தனக்கு உறுதிசெய்யப்பட்டதாகவும் சாதித்து வருகிறார். ஆனால், அவர் ஆஸ்ரேலியாவில் வந்திறங்கியதும் அவரது விசா ரத்து செய்யப்பட்டிருப்பதாக எல்லையில் அறிவிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் பல மணிகள் தடுத்து வைக்கப்பட்டபின் யோக்கோவிச் மெல்போர்ன் தனிமைப்படுத்தல் ஹோட்டலொன்றில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். அவர் ஆஸ்ரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார் என்றும் திரும்பிச் செல்லவேண்டுமென்றும் ஆஸ்ரேலிய அரசு தெளிவாகக் குறிப்பிட்டுவிட்டது.

செர்பிய அரசு யோக்கோவிச்சுக்காகக் குரல்கொடுக்க ஆஸ்ரேலியப் பிரதமரோ “எவரும் எங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு விதிவிலக்கானவர்கள் அல்ல,” என்று குறிப்பிட்டிருக்கிறார். யோக்கோவிச் மற்றைய டென்னிஸ் வீரர்கள்போலன்றி அநியாயமாக நடாத்தப்படுவதாக செர்பியப் பிரதமர் குற்றஞ்சாட்டுகிறார். வேறு வீரர்கள் போட்டிகளில் பங்குபற்ற மருத்துவ விதிவிலக்குகள் பெற்று அனுமதிக்கப்பட்டதாகவும் செர்பியர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். யோக்கோவிச் தங்கவைக்கப்பட்டிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே செர்பிய தேசக்கொடியுடன் அவர்கள் ஊர்வலம் செய்துவருகிறார்கள்.

இதே சமயம் செக் குடியரசைச் சேர்ந்த டென்னிஸ் விராங்கனையும் ரெனாதா வொரொகோவா போட்டிகளில் பங்கெடுக்க வந்து எல்லையில் தடுக்கவைக்கப்பட்டிருக்கிறார். அவர் கடந்த ஆறு மாதங்களுக்குள் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவர் என்ற மருத்துவச் சான்றிதழுடன் தடுப்பு மருந்து எடுக்காததற்கான விதிவிலக்குடன் வந்திருக்கிறார். ஆனால், அந்த மருத்துவக் காரணம் ஆஸ்ரேலியாவில் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அவருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. வொரொகோவாவும் மெல்போர்னின் யோக்கோவிச் தங்கியிருக்கும் ஹோட்டலிலேயே தங்கவைக்கப்பட்டிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்