பல நாட்களாக எவர் கண்ணிலும் படாத ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் என்னானார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷகு இரண்டு வாரங்களாக எந்த ஒரு பொதுநிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் என்ன ஆனார் என்ற கேள்வி ரஷ்யாவில் எழுந்திருக்கிறது. கடைசியாக, அவர் தொலைக்காட்சியில் தோன்றியபோது அவர் ரஷ்யாவின் “வரையறுக்கப்பட்ட பிரத்தியேக இராணுவ நடவடிக்கை” எந்த நிலையிலிருக்கிறது என்று குறிப்பிட்டார்.
உக்ரேன் மீதான போரில் எதிர்பார்த்த அளவு வெற்றி ரஷ்யாவுக்குக் கிடைக்காமல் இழுபட்டுக்கொண்டிருப்பதற்கான காரணம் பாதுகாப்பு அமைச்சரே என்று அவர் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கலாமா என்று பலராலும் கேட்கப்படுகிறது. அதை மறைக்க நேற்றைய தினம் தொலைக்காட்சியில் அவர் தோன்றும் காட்சிகள் சில காட்டப்பட்டன. அவைகளொன்றில் ஒலியிருக்கவில்லை, இன்னொன்றில் செர்கெய் ஷகு ஒரு ஓரத்தில் தோன்றியது காட்டப்பட்டது. குறிப்பிட்ட அந்தப் படங்கள் முன்னர் எடுக்கப்பட்டவை என்று குறிப்பிடப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சர் இருதயக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற வதந்திகளும் நிலவுகின்றன. அதனால், ஜனாதிபதி புத்தினின் பிரத்தியேக காரியதரிசி, “செர்கெய் ஷகு பற்பல முக்கிய காரியங்களில் ஈடுபடவேண்டியிருக்கிறது. அதனால், அவரால் பாதுகாப்புக் குழுக் கூட்டம் உட்பட வேறு நிகழ்ச்சிகளிலும் பங்குகொள்ள முடியவில்லை,” என்று குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்