“‘எங்கள் இராணுவத்தின் நோக்கம் டொம்பாஸ் பிராந்தியத்தை மீட்பதில் முக்கியத்துவப்படுத்தப்படும்,” என்று ரஷ்யா அறிவித்தது.
உக்ரேன் மீதான இராணுவ நடவடிக்கையின் முதலாவது பாகம் முற்றுப்பெற்றதாக ரஷ்யா வெள்ளியன்று அறிவித்தது. தொடர்ந்து உக்ரேனின் கிழக்குப் பகுதியான டொம்பாஸ் பிராந்தியத்தை முழுவதுமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் ஈடுபடப்போவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் அச்செய்தி மேலும் தெரிவித்தது.
மேற்கண்ட நகர்வு ரஷ்யத் தலைமை எதிர்பார்த்தது போல உக்ரேன் மீதான போரில் வெற்றி ஏற்படவில்லை என்பதையே காட்டுவதாகப் பல இராணுவ, அரசியல் கணிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. உக்ரேன் நாட்டினரின் எதிர்ப்புச் சக்தி, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பதில் நகர்வுகள், தமது சொந்த இராணுவத்தின் பலம் போன்றவற்றை புத்தின் தவறாகக் கணித்ததே இந்த நிலைமைக்கான காரணம் என்று அவர்கள் விளக்குகிறார்கள்.
டொம்பாஸ் பிராந்தியத்திலிருக்கும் இரண்டு குடியரசுகள் மீது ரஷ்யாவின் அரசு ஏற்கனவே பலமான பிடியை வைத்திருந்தது. அதையே தொடர்ந்தும் தனது போருக்கு முழுக் காரணமாகக் காட்டுவதாயின் ரஷ்யா மிக அதிக சக்தியை விரயம் செய்தும் உக்ரேன் அரசாங்கத்தைத் தனது கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பதால் சாக்குப் போக்குச் சொல்கிறது என்று கருதப்படுகிறது.
அஸொவ் கடலின் பாகங்களிலிருக்கும் நிலப்பிராந்தியத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றுவதில் வெற்றிபெற்றிருக்கின்றன. அதன் மூலம் கிரிமியாவுக்கும் டொம்பாஸ் பிராந்தியத்துக்கும் இடையே நிலத்தொடர்பை ரஷ்யா உண்டாக்கியிருக்கிறது. உக்ரேன் தலைநகரைக் கைப்பற்ற அதைச் சுற்றிவளைத்துச் சில வாரங்களாகத் தாக்கிய ரஷ்யப் படைகள் தமது நோக்கத்தில் வெற்றிபெறவில்லை. ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட சில பகுதிகளை மீளத்தாக்கி உக்ரேன் இராணுவம் கைப்பற்றியிருக்கிறது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் புள்ளிவிபரங்களின்படி அவர்களுடைய இழப்பு சுமார் 1,500 இராணுவத்தினர் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால், உண்மையில் அவர்களின் இழப்பு 7,000 – 15,000 இறப்புக்கள் என்றும், சுமார் 40,000 பேர்வரை காயப்பட்டிருக்கலாம் என்றும் நாட்டோ அமைப்பின் கணிப்பு குறிப்பிடுகிறது. அத்துடன், வானத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் பலவற்றின் மூலம் ரஷ்யாவின் இராணுவம் பெருமளவில் இராணுவத் தளபாடங்களை இழந்திருப்பதும் தெரியவருகிறது. அவற்றில் ஒரு பாகத்தை அவர்கள் முன்னேற இயலாமல் மாட்டுப்பட்டுக் கைவிட்டதாக உக்ரேன் குறிப்பிடுகிறது.
ரஷ்யாவின் பாகத்தில் தமது இராணுவம், வர்த்தக பலம், அரசியல் நகர்வுகள் மீதான தவறாக இருக்கும் அதே சமயம் மேற்கு நாடுகளும் கடந்த வருடங்களாக ரஷ்யாவின் பலத்தை அபரிமிதமாகக் கணக்கிட்டிருக்கின்றன என்றும் சில இராணுவக் கணிப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள். சமீப வருடங்களில் ரஷ்யாவின் இராணுவத்தின் பயிற்சிகள், திட்டமிடல்களைக் கவனித்து மேற்கு நாடுகள் அளவுக்கதிகமான பீதியடைந்திருக்கின்றன. புத்தினின் அரசியல் பலத்தையும் அளவுக்கதிகமாக மதிப்பீடு செய்திருக்கலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்