இழிவின்னும் இருப்பதுவோ !
கண்குருடு போக்குதற்குக்
—–கண்தானம் வேண்டுபவர்
மண்மீது தன்சாதி
—-மதக்கண்ணைக் கேட்டதுண்டா !
அடிப்பட்டுக் குருதிக்கே
—-அலைகின்ற போதிங்கே
பிடிப்புடனே கேட்டதுண்டா
—-பிறந்தசாதி குருதிதன்னை !
பழுதுபட்ட சிறுநீரகம்
—-பறித்துவேறு பொருத்துதற்குத்
தழுவும்தம் குலத்தவர்தாம்
—-தரவேண்டும் என்றதுண்டா !
இதயமாற்றுச் சிகிச்சைக்கே
—-இணைந்தசாதி உடலிருக்கும்
இதயம்தான் வேண்டுமென்று
—-இறப்பவர்கள் கேட்டதுண்டா !
உள்ளுறுப்போ வெளியுறுப்போ
—-உயிர்பிழைக்கத் தேவையெனில்
எள்ளளவும் சாதிமதம்
—-எவரேனும் பார்த்ததுண்டா !
மனம்கலந்த காதலர்க்கு
—-மணம்முடிக்க மட்டுமிங்கே
இனம்சாதி மதம்பார்க்கும்
—-இழிவின்னும் இருப்பதுவோ !
எழுதுவது : பாவலர் கருமலைத்தமிழாழன்