வட ஆபிரிக்க நாடுகளில் அமெரிக்காவுடன் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியைக் கையாள முயலும் பிளிங்கன்.
ஆபிரகாம் ஒப்பந்தத்தில் இணைந்த அராபிய நாடுகளை இஸ்ராயேலில் ஒன்று கூட்டி மாநாடு நடத்திய அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் திங்களன்று வட ஆபிரிக்க நாடான மொரொக்கோவைச் சென்றடைந்தார். அதையடுத்து அவர் புதன் கிழமையன்று அல்ஜீரியாவுக்குப் பயணமானார்.
அல்ஜீரியாவுக்கும், மொரொக்கோவுக்கும் இடையே நீண்டகால இழுபறியாக இருக்கும் பிராந்தியம் மேற்கு சஹாரா. மொரொக்காவின் எல்லைக்குள் இருக்கும் அங்கே சஹாராவியர் என்றழைக்கப்படும் மக்கள் வாழும் அப்பகுதியில் இயங்கும் பொலிசாரியோ முன்னணி என்ற அமைப்பினர் தனி நாடு கோரி வருகிறார்கள். அதை ஆதரித்து வருகிறது அல்ஜீரியா. அதனால், அவ்விரு நாடுகளும் தமக்குள் அரசியல் கசப்புணர்ச்சி கொண்டிருக்கிறார்கள்.
அந்தப் பிரச்சினையை முடுக்கி விட்டது போல ஆனது, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி மேற்கு சஹாராவின் உரிமை மொரொக்கோவுக்கு என்று பிரகடனம் செய்ததாகும். அதையடுத்து மொரொக்கோ ஆபிரகாம் ஒப்பந்தத்தில் சேர்ந்து இஸ்ராயேலுடன் நெருங்கிய உறவுகளை உண்டாக்கிக்கொண்டது. அல்ஜீரியாவுக்கும் மொரொக்கோவுக்கும் இடையேயான உறவுகள் அதையடுத்து மேலும் மோசமாகியிருக்கிறது.
மேற்கு சஹாரா பிராந்தியத்தைத் தனது காலனியாக முன்பு கொண்டிருந்த ஸ்பெயின் அதற்குச் சுயாட்சியைக் கொடுக்கப் பிரேரணை செய்திருக்கிறது. அப்பிரச்சினையை அரசியல் ரீதியாக அணுகுவதற்கு முட்டுக்கட்டையாக அமெரிக்கா அதை மொரோக்கோவுடையதாகப் பிரகடனம் செய்தமை இருந்து வருகிறது. டிரம்ப் செய்த அந்த நகர்வை அதையடுத்து ஆட்சிக்கு வந்த ஜோ பைடன் அரசு பின்வாங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது அல்ஜீரியா. அதை அமெரிக்க அரசு இதுவரை செய்யாததால் எரிச்சலடைந்திருக்கிறது அல்ஜீரியா.
சாள்ஸ் ஜெ. போமன்