மொரொக்கோவின் கற்பகதரு ஆர்கன் மரங்களின் தினத்தை ஐ.நா கொண்டாடுகிறது.

Argania spinosa என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்ட ஆர்கன் மரங்கள் மொரொக்கோவில் மட்டுமே வளர்கின்றன. மொரொக்கோவின் தென்மேற்குப் பிராந்தியத்தில் அகதிரைச் சுற்றி இது அதிகமாக வளர்ந்தாலும் நாடு முழுவதும் பரவலாகக் காணக்கிடைக்கிறது. பல பாவனைகளுக்கும் உதவும் இந்த மரம் நாட்டின் ஆபரணம் என்று மொரொக்கோ பெருமையுடன் கருதுகிறது.

ஆர்கன் மரக்காடுகளில் மொரொக்கோவின் இடையர்கள் தமது ஆடுகளை மேயவிடுவதுண்டு. சுமார் 8 – 10 மீற்றர்கள் உயரமாக வளரும் இம்மரங்களில் ஏறும் ஆடுகள் அதன் காய்களையும் கடித்து அதிலிருந்து அதன் கொட்டைகளைத் துப்பிவிடுகின்றன, அல்லது அவை அதன் சமிபாட்டு வழியூடாகப் பயணித்து மலத்துடன் கலந்து வெளியேறுகின்றன. 

ஆடுகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுவதுடன் இதன் பாவனை முடிந்துவிடுவதில்லை. அக்கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உணவு சமைப்பது முதல் அழகுச் சாதனங்கள் வரை பல தேவைகளுக்கும் பாவிக்கப்படுகின்றன. அந்த எண்ணெயில் பிரத்தியேக மருத்துவக் குணங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. மொரொக்கோவைப் பொறுத்தவரை அவர்களால் பாரம்பரியமாகப் பாவிக்கப்பட்ட இவ்வெண்ணெய் சமீப வருடங்களில் சர்வதேச அழகுச் சாதனத் தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தையும் கவர்ந்திருக்கின்றது.

அழகுச் சாதனத் தயாரிப்பு நிறுவனங்கள் இவைகளை வாங்குவதால் இவை பற்றிய பல ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. இதன் பாவிப்பு அதிகரித்து ஏற்றுமதியும் படு வேகமாக அதிகரித்து மொரொக்கோவுக்கு அன்னியச் செலாவணியைச் சம்பாதித்துக் கொடுக்கிறது.  L’oreal, Unilever ஆகிய பிரபல நிறுவனங்களாலும் கொள்வனவு செய்யப்படும் இவ்வெண்ணெய் ஏற்றுமதி 700 மில்லியன் தொன்களாக வளர்ந்திருக்கிறது.

தமது கலாச்சாரத்துடனும், பாரம்பரியத்துடனும் கலந்திருப்பதால் இம்மரங்களை நாட்டின் பெருமையாகக் கருதும் மொரொக்கோவுடன் சேர்ந்து மே பத்தாம் திகதி ஐ. நா ஆர்கன் மரங்களின் தினத்தைக் கொண்டாடுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *