சுவீடனின் உலகப் பிரபலங்களும், அரசும் நாஸிகள் என்று படங்களுடன் விளம்பரம் செய்து வருகிறது ரஷ்யா.
மொஸ்கோ நகரின் பகுதிகளிலும், பேருந்துகளிலும் சுவீடன் ஒரு நாஸி ஆதரவு நாடு என்ற விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. சுவீடிஷ் தூதுவராலயத்தை அடுத்திருக்கும் பகுதிகளிலும் இருக்கும் அந்த விளம்பரங்களில், “நாங்கள் நாஸிசத்துக்கு எதிரானவர்கள், அவர்கள் அப்படியல்ல,” என்ற செய்தி அவ்விளம்பரங்களில் இருக்கிறது. மறைந்த பிரபலங்களான ஐக்கியா நிறுவன ஸ்தாபகர் இன்வர் காம்ராட், குழந்தை இலக்கிய எழுத்தாளர் அஸ்திரிட் லிண்ட்கிரன், சினிமா தயாரிப்பாளர், இயக்குனர் இன்வர் பெர்க்மான் ஆகியோருடைய படங்கள் விளம்பரங்களில் நாஸிகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
“குறிப்பிட்ட விளம்பரங்கள் பற்றி எங்களுக்குத் தெரியும். ஆனால், நாம் ரஷ்ய அரசுடன் இதுபற்றிய மோதல்களைக் கிளப்பத் தயாராக இல்லை. தமது அரசின் நடவடிக்கைகள் பற்றிய நியாயமான விமர்சனங்களை முன்வைப்பவர்களை நாஸிகள் என்று தூற்றுவது ரஷ்யாவின் வழக்கமாகியிருகிறது,” என்று அந்த விளம்பரங்கள் பற்றி சுவீடனின் வெளியுறவுக் காரியாலயம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.
அவ்விளம்பரத்திலிருப்பவைகளை டுவீட்டிய முன்னாள் சுவீடிஷ் பிரதமர், “நாங்கள் நாஸிகள் என்று விளம்பரம் செய்கிறீர்களே, உங்களுக்கு ஒரு எல்லையே இல்லையா? அல்லது நீங்கள் எங்கள் மீதும் “நாஸி அழிப்பு நடவடிக்கை,” எடுக்கப்போகிறீர்களா? இப்படியான நடவடிக்கைகள் நாம் நாட்டோ அமைப்பில் சேரவேண்டும் என்பதை மேலும் வலியுறுத்துகின்றன,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வரவிருக்கும் வாரங்களில் பின்லாந்தும், அதையடுத்து சுவீடனும் நாட்டோ அமைப்பில் சேருவதற்காக விண்ணப்பங்களை அனுப்புவதா என்று முடிவெடுக்க இருக்கின்றன. இரண்டு நாடுகளின் பொதுமக்கள் அபிப்பிராயமும், அரசியல் அபிப்பிராயமும் பெருமளவில் நாட்டோ அங்கத்துவராவதையே ஆதரிக்கின்றன. இரண்டு நாடுகளின் உயர்மட்ட அரசியல் தலைவர்களும் பூடகமாகத் தாம் எடுக்கவிருக்கும் முடிவும் அப்படியே இருக்கும் என்பதைத் தெரிவித்திருக்கிறார்கள்.
உக்ரேன் ஆக்கிரமிப்பில் ரஷ்யா இறங்க முன்பு இரண்டு நாடுகளிலும் நாட்டோ அங்கத்துவத்துக்குப் பொதுமக்களிடமோ, அரசியல்வாதிகளிடையேயோ பெருமளவில் எதிர்ப்பே இருந்து வந்தன. ரஷ்ய ஆக்கிரமிப்பை அடுத்து இவ்விரண்டு நாடுகளிலும் இந்த விவாதங்கள் தீவிரமாகி சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் ஆதரவு அதிகரித்து வந்திருக்கிறது.
அதற்கு இணையாக ரஷ்யாவும் தனது மிரட்டல்களை வெவ்வேறு வகைகளில் காட்டி வருகிறது. உக்ரேன் போர் ஆரம்பித்த சமயத்தில் அணு ஆயுதம் தாங்கிய ரஷ்யப் போர் விமானங்கள் சுவீடனின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்தன. சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் சுவீடனின் வான் எல்லைக்குள் நுழைந்து தனது சண்டித்தனத்தைக் காட்டிச் சென்றிருக்கிறது ரஷ்ய விமானம். அத்துடன் புத்தின் உட்பட ரஷ்யத் தலைவர்கள் சிலர், “நாட்டோவில் சேரப்போகிறீர்களா, அதன் விளைவுகளைச் சந்திக்கவும் தயாராக இருங்கள்,” என்று மிரட்டல் அறிக்கை விட்டிருக்கிறார்கள்.
ரஷ்யாவின் “சுவீடன் = நாஸிகள்” விளம்பரமும் நாட்டோ நெருங்கலைத் தாக்குமுகமாகவே நடத்தப்பட்டு வருவதாகக் கருதப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்