பாலியல் தொழிலும் சட்ட அங்கீகாரமும்|பலராலும் பேசப்படாத பேசப்படவேண்டிய பக்கம்

எனக்கு நன்கு தெரிந்த இருவர் கடந்த ஆறு மாத கால இடைவெளிக்குள் சமூக வலைத்தளத்தில் ஒரே கேள்வியை முன் வைத்துள்ளனர். இருவருமே இலங்கையில் வசித்து வருவதுடன் சமூகத்தில் தாம் சார்ந்த தொழில் மூலம் கனதியான பங்களிப்பு வழங்கி வருபவர்கள். இருவருமே வேறு வேறு பின்னணித் தகவல்களோடு இரு வேறு கோணங்களில் ஒரு கலந்துரையாடலை நோக்கியதாக இந்தக் கேள்வியை முன் வைத்துள்ளனர் என்றே நான் எடுத்துக் கொள்கிறேன். இவர்கள் மட்டுமல்ல, வேறு பலரும் கடந்த காலங்களில் இதே கருத்தை அல்லது இதையொத்த கருத்தினை முன் வைத்துள்ளார்கள். நீங்களும் இப்படியான பதிவுகளைக் கடந்து வந்திருப்பீர்கள்.

 

அந்தக் கேள்வி – “இலங்கையில் ஏன் பாலியல் தொழிலை சட்டரீதியானதாகச் செய்யக் கூடாது?”

 

இலங்கை போன்ற கலாச்சார விழுமியங்களைத் தமது வாழ்வியலின் அடிநாதமாகக் கருதும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாட்டில் பாலியல் தொழிலை சட்டரீதியாக்குவது இலகுவானதல்ல என்பதே இன்றைய யதார்த்தம். இருந்தபோதிலும் நான் மேலே குறிப்பிட்ட இரண்டு நண்பர்களின் கூற்றுகள் சார்ந்து இந்த விடயத்தைக் கொஞ்சம் பேசலாம் என்று நினைக்கிறேன்.

 

அந்த இருவரில் ஒருவர் ஏன் பாலியல் தொழிலை சட்டரீதியாக மாற்ற வேண்டும் என்று சொன்னதற்கு காரணம் எமது நாட்டில் தொடர்ந்து நடைபெறும் பெண்களுக்கு எதிராக பாலியல் தாக்குதல் தொடர்பானது. அவரது கூற்றின்படி, இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்முறை அதிகமாக உள்ளன. திரும்பத் திரும்பப் பண்பாடு, கலாச்சாரம் என்று பேசிக் கொண்டிருக்காமல் பாலியல் தொழிலை சட்டரீதியாக மாற்ற வேண்டும். அதன் மூலமே சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைப் பெருமளவில் குறைக்க முடியும் என்று தனது சட்டத்துறை சார்ந்த நண்பரை மேற்கோள் காட்டிக் கூறியுள்ளார்.

 

இது எவ்வளவு தூரம் உண்மையென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இந்தக் கூற்று உண்மையென்றால் ஏற்கனவே பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கீகரித்த நாடுகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பெருமளவில் குறைந்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் நடைமுறையில் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள பல நாடுகளில் குறிப்பிடத்தக்க சாதகமான மாற்றத்தை அந்த ஏற்பாடு ஏற்படுத்தவில்லை என்றுதான் பல தரவுகள் சொல்கின்றன.  

 

உதாரணமாக, இந்தியாவில் 1956 இலேயே மத்திய அரசினால் பாலியல் தொழில் செய்வதற்கு பகுதியான சட்ட அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. அதன்படி, பாலியல் தொழில் செய்பவர் தனிப்பட்ட முறையில் இந்தத் தொழிலைச் செய்ய முடியும். ஆனால் பொது இடங்களில் தம்மை விளம்பரப்படுத்தவோ கடை போன்ற அமைப்பில் தொழில் செய்யவோ அனுமதியில்லை. அப்படி பகுதியாகவேனும் பாலியல் தொழில் செய்ய அனுமதி உள்ள இந்தியாவில்தான் கடந்த இருபது வருடங்களில் அதிகளவு பாலியல் பலாத்காரங்கள், கூட்டுப் பாலியல் வல்லுறவுகள், குழந்தைகளைக் கூட பாலியல் துஸ்பிரயோகம் செய்தல் என்பன மிக அதிக அளவில் நடைபெற்றுள்ளது என்பதை நீங்களே அறிவீர்கள்.  

 

அதேநேரம், இவ்வாறு பாலியல் தொழிலை சட்டரீதியானதாக மாற்ற வேண்டும் அதனால் பல நன்மைகள் உள்ளன என்று வாதிப்பவர்கள் சொல்லும் சில காரணங்களையும் நாங்கள் புறம் தள்ளிவிட முடியாது.

 

இந்தத் தொழிலிலுக்கான சட்ட அங்கீகாரம் அதில் ஈடுபடும் பெண்களுக்கு பாதுகாப்பை வழங்கும் என்பதே சட்ட அங்கீகாரம் கோருவோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனால் அந்தப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைவடையும்; காவல் துறையில் உள்ளவர்கள் இந்தப் பெண்களைத் துன்புறுத்துவதும் வற்புறுத்தி தமது பாலியல் தேவைக்கு பயன்படுத்துவதைத் தடுக்க முடியும்; அவர்களை பதிவு செய்யப்பட்ட சுயதொழில் செய்வோராக மாற்றுவதன் மூலம் அரசுக்கு வரிமூலம் வருமானம் கிட்டும்; பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக பெண்கள், சிறுமிகளைக் கடத்துவது குறையும்; சமூகத்தில் குடும்பப் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் குறைவடையும்; பாலியல் தொழிலில் ஈடுபடுவோருக்குப் போதுமான சுகாதார வசதிகளை வழங்க முடியும் என பல நன்மைகளைப் பட்டியல் இடுகிறார்கள்.

 

இவற்றுள் இந்தத் தொழிலில் ஈடுபடுவோருக்கு சுகாதார சேவைகளைப் பெற்றுக் கொடுப்பது உண்மையில் அந்தச் சேவைகளைப் பெறுபவர்களையும் பாதுகாக்கும் என்பது உண்மையே. இந்தியாவில் 2020-21 Lockdown காலத்தில் பாதுகாப்பற்ற முறையில் பாலியல் சேவை பெற்றுக்கொண்ட 85,000 ஆண்களுக்கு HIV/AIDS தொற்று ஏற்பட்டுள்ளமையை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். அந்த 85,000 ஆண்களில் திருமணம் முடித்திருந்தவர்கள் அதன் பின்னர் தமது வாழ்க்கைத் துணைக்கும் அந்த நோயைப் பரப்பியிருக்கக் கூடும்.

 

அதேபோல, காவல்துறையின் அத்துமீறல்கள், பாலியல் துஸ்பிரயோகம் என்பவற்றைக் கட்டுப்படுத்தவும் சட்ட அங்கீகாரம் உதவும் என்பது மறுக்க முடியாத ஒரு அம்சமாகும். ஆனால், இதனால் சமூகத்தில் ஏனைய பெண்களுக்கு எதிராக பாலியல் தாக்குதல்கள், வல்லுறவுகள் குறைவடையும் என்பது இன்னமும் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. உதாரணமாக பாலியல் தொழில் முழுமையாக சட்டரீதியாக்கப்பட்ட ஜெர்மனி போன்ற நாடுகளிலும் எதிர்பார்த்த அளவுக்கு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைத் தாக்குதல்கள் குறைவடையவில்லை என்பதுதான் உண்மை. சில பிராந்தியங்களில் முழுமையாகவும் சில பிராந்தியங்களில் பகுதியாகவும் சட்டபூர்வமாக்கப்பட்ட அவுஸ்திரேலியாவில் கூட இன்றுவரை பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் வீதம் எதிர்பார்த்த அளவு வீழ்ச்சியடையவில்லை.

 

மறுபக்கத்தில், சட்ட அங்கீகாரம், பாலியல் தொழிலில் ஈடுபடுத்த பெண்கள், சிறுமிகளைக் கடத்துவதைக் குறைக்கும் என பலர் வாதித்தாலும், அவ்வாறு சட்ட அங்கீகாரம் உள்ள சில நாடுகளிலும் இந்த விடயத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை. மாறாக சட்ட அங்கீகாரம் இல்லாத நாட்டிலிருந்து சட்ட அங்கீகாரம் உள்ள நாட்டிற்கு பெண்களைக் கடத்துவது அதிகரித்து இருப்பதையே தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இதே பாணியில் இலங்கையில் சட்ட அங்கீகாரம் கிடைத்தால் இலங்கைக்கும் அண்டை நாடுகளில் இருந்து இளம் பெண்கள் கடத்தி வருவதற்கே அதிக சந்தர்ப்பம் உள்ளது. ஏற்கனவே கடல் மார்க்கமாக கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் தாரளமாக இலங்கைக்குள் கடத்தி வரப்படும் சூழலில் பெண்களைக் கடத்தி வருவது கடினமானதாக இருக்கப் போவதில்லை.

 

ஆனாலும் இன்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பாலியல் தொழில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றே வருகிறது. அவ்வாறு தொழில் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும் சமூக சேவை அமைப்பில் பணிபுரியும் சிலர் கடந்த காலங்களில் தெரிவித்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் சட்ட அங்கீகாரம் பாலியல் தொழிலாளர்களுக்கு சில பாதுகாப்பை வழங்கும் சந்தர்ப்பம் இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அதன் மூலம் சமூகத்தில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறைவடைவதற்கான சாத்தியம் குறைவாகவே இருக்கிறது. ஏனெனில் எமது சமூகத்தில் காணப்படும் வேறு சில பிரச்சனைகளும் களையப்பட்டாலே பாலியல் குற்றங்களைக் குறைப்பது சாத்தியமாகலாம்.

 எனது இன்னொரு நண்பரும் இதே விடயத்தில் தனது கருத்தை வேறு கோணத்தில் முன் வைத்திருந்தார் என்று ஆரம்பத்தில் கூறியிருந்தேன் அல்லவா? அதைப் பற்றி நாங்கள் இன்னொரு பதிவில் பேசுவோம்.

எழுதுவது : மணிவண்ணன் மகாதேவா – கனடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *