பரிகாரம் செய்யச் சொல்லும் மோசடித்தனம்|சோதிடத்திற்கே மாறானது இது
பரிகாரங்கள் செய்வதால், ஒரு கிரகத்தின் சுயதன்மையை, மாற்ற முடியுமா? அது சாத்தியமா?
ஒரு ஜாதகத்தில் தசா நாதனை மீறி, எந்த ஒரு பலனும் நடக்காது.
புத்தி ,அந்தரம், கோச்சாரம் போன்றவை பக்கவாத்தியங்கள் போல் இணைந்து செயல்படும்.
திசா,புத்தி, அந்தரம், கோச்சாரம் என நான்கும் ஒரே நேரத்தில் பலமிழக்கும் போது, எவ்வளவு செல்வாக்கான மனிதனையும் ஒரு ஆட்டு ஆட்டி விடும்.
இதில் மனிதராய் பிறந்த யாரும் விதிவிலக்கல்ல.
சமீபத்தில் ஜாதகம் பார்க்க வந்த ஒருவரின் ஜாதகத்தில், குரு அஸ்தமனம் ஆகி தசை நடத்திக் கொண்டிருந்தது.
குரு திசையில் ,கேது புத்தியில் வேலை போய் விட்டது .தற்போது சுக்கிர புக்தி நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு ஜோதிடர், அவரிடம் குரு உனக்கு அஸ்தமனம் ஆகியுள்ளது. பத்தாயிரம் கொடுத்தால், கோயிலில் விஷேச பூஜை செய்து, குருவின் அஸ்தமனம் தோஷத்தை நீக்கி விடலாம் என கூறியிருக்கிறார்.
பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஆறாயிரம் கொடுத்தால், தோஷ நிவர்த்தி செய்வதாக சம்பந்தப்பட்ட ஜோதிடர் கூறியுள்ளார்.
இவர் அவரிடம் , வெறும் ஆறாயிரம் கொடுத்தால், ஒரு கிரகத்தின் அஸ்தமன தோஷத்தையே மாற்றியமைக்கும் வல்லமை இருக்குமானால் ,உலகத்தில் யாரும் கஷ்டப்படவே மாட்டார்கள் என்பதை மட்டும் தான் கூறியுள்ளார்.
அதை கேட்டவுடன், சம்பந்தப்பட்ட நபர் இவரை பிளாக் செய்து விட்டார்.
வெறும் 6000 கொடுத்தால் ஒரு கிரகத்தின் அஸ்தமன தோஷத்தை மாற்றியமைக்கும், ஜகஜ்ஜால கில்லாடிகள் வாழும் புண்ணிய தேசம் இது.
சூரியனுக்கு 11 டிகிரிக்குள் இருக்கும் குரு அஸ்தமனம் அடையும்.
ஒருவர், அந்த மாதிரியான கிரக அமைப்பு இருக்கும்போது, பிறக்க வேண்டும் என்பது அவரது முன்வினைப் பயன்.
அந்த நேரத்தில் பிறந்து ,அந்த திசை சரியான வயதில் நடைமுறைக்கு வந்து கஷ்டப்பட வேண்டும் என்பதும் விதி.
தேவ குரு திசையில், அசுர குரு சுக்கிர புத்தி எப்பொழுதும் பெரிய அளவு நன்மை செய்யாது.கேது புத்தியிலேயே அதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. அவ்வளவுதான்!
வெறும் 6000 ரூபாய் கொடுத்தால், சூரியனிடமிருந்து, குருவை 11 டிகிரி தள்ளி வைத்து விடுவார்.
பார்டர் தாண்டி, பாகிஸ்தான் தீவிரவாதிய,பார்க் பண்ணிட்டு வந்திருவேன் என்பது போல இருக்கு ,உங்க அக்கபோரு.
என்ன ஒரு புத்திசாலித்தனம்.
ஜோதிடத்தின் அடிப்படை தார்ப்பரியமே, நியூட்டனின் மூன்றாம் விதியை ஒத்தே அமைகிறது.
சிம்பிளா சொல்லணும்னா, ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு.
நீ நல்லது செய்திருந்தால் ,அது உனது புண்ணியக் கணக்கில் புண்ணியமாக டெபாசிட் ஆக பதிவாகும். பாவம் செய்திருந்தாலும் அதே அமைப்புதான்.
ஒரு கிரகத்தின் இயல்பு நிலையை நீங்கள் என்ன செய்தாலும மாறாது. மாற்றவும் முடியாது.
கல் வைத்த மோதிரம் போடுங்கள் என்றால் ,உங்கள் காதில் கடுக்கன் போடப் போகிறான் என்று அர்த்தம்.
கடவுளிடம் ,கண்ணீர் மல்கி, கருணை மனு கொடுக்க மட்டுமே உனக்கு உரிமையுள்ளது .
அதை ஏற்பதும் ,நிராகரிப்பதும் நீ செய்த, நல்வினை ,தீவினை அடிப்படையில் இறைவனே தீர்மானிப்பார். மற்றபடி பரிகார முறைகள் எல்லாம் மோசடித்தனம் மட்டுமே .
எழுதுவது : முனைவர் பாலசந்தர், மண்ணச்சநல்லூர்