கொழும்பு மாநகரத்தில் அதிகரித்த மாரடைப்பு வீதம்|மாநகர மரணவிசாரணை அதிகாரி சொன்ன தகவல்

அண்மைக்கால தரவுகளின் அடிப்படையில் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் நிகழும் மரணங்களில் சுமார் தொண்ணூறு வீதமானவை (90%) மாரடைப்பினால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

இப்பிரதேசத்தில் முப்பதில் இருந்து எண்பது வயதிற்கிடைப்பட்டவர்களே பெரும்பாலும் மாரடைப்பால் மரணமெய்தியுள்ளனர் என்பது பதிவாகியுள்ளது. மற்றும் மாரடைப்பு காரணமாக வாரம் ஒன்றுக்கு சுமார் பதினைந்து இறப்புக்கள் பதிவாகுவதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அண்மைக்காலங்களில் மாரடைப்பினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர விபத்து மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.

பொதுவாக, ஆரோக்கியமற்ற உணவு முறை, போதிய உடல் உழைப்பு இல்லாமை, புகையிலை பயன்பாடு மற்றும் குடிப்பழக்கம் போன்றவை மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக கருதப்படுகின்றது.

இவற்றில், நாம் உண்ணும் உணவு பழக்கம் அதாவது, ஆரோக்கியமான உணவுத் திட்டம் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கவும், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் பெரும்பங்களிக்கின்றது .

எனவே, அன்றாட உணவில் பல்வேறு வகையான ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள உணவுகள், நார்ச்சத்து அதிகம் நிறைந்த பழங்கள், காய்கறிகள், மற்றும் தானிய வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். முக்கியமாக எண்ணெய் சேர்த்த உணவுகள், கொழுப்பு உணவுகள், அதிக உப்பு மற்றும் இறைச்சிகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுரை பகிரப்படுகிறது.

மேலும் உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கை முறையுடன் சேர்க்கப்படும் மோசமான உணவுப் பழக்கம் மாரடைப்பு அபாயத்தை இரட்டிப்பாக்குகிறது. எனவே நடைபயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், மேலதிகமான உடற் பயிற்சிகள் என எந்த வகையிலுமாக ஒரு உடற்பயிற்சியை தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று முறையாவது செய்யும் வழக்கப்படுத்தினால் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், இது மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாகக் குறைக்கின்றதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பொதுவாக, ஒருவருக்கு நெஞ்சைப் பிடிக்கும் அளவுக்கு மாரடைப்பு வருவதற்கு முன்னால் நெஞ்சு கனமாக இருப்பது, கடுமையாக வியர்ப்பது, பதற்றமாக இருப்பது, உடல் சோர்வாக உணர்வது போன்ற சாதுவான அறிகுறிகளை அலாரம்போல் அடித்துக் காண்பிக்கும். ஆனால், அவற்றை அலட்சியம் செய்வதால் வந்திருக்கும் மாரடைப்பை ஆரம்பத்தில் உணரத் தவறியிருப்போம். இதுதான் ஆபத்தான மாரடைப்பில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது.

எனவே, ஓர் அசௌகரியம் உடலை வருத்தும்போது, ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்று கருதாமல் தாமதமின்றி மருத்துவரிடம் செல்ல வேண்டும். மாரடைப்பைப் பொறுத்தவரை அறிகுறிகள் ஆரம்பித்த முதல் முக்கால் மணி நேரம் உயிரிழப்பை தவிர்க்கக்கூடிய வாய்ப்புள்ள நேரம். அந்த நேரத்துக்குள் மருத்துவரிடம் சென்றுவிட்டால், இறப்பைத் தவிர்க்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுவது குறிப்பிடத்தக்கது.

எழுதுவது : நகீரா, லண்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *