ஒரு உயிரின் குரல்….
நான்
அனுபவித்து முடித்திருக்கிறேன்
என் வாழ்க்கையை!
நேற்றுகள் எல்லாம்
பதிவு பெற்றிருக்கிறது எனக்குள்!
தொடங்கிய பயணம் நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில்தான் வாழ்க்கையின் ரகசியமே தெரிகிறது!
குழந்தையாய்…
குமரனாய்…
கணவனாய்…
தந்தையாய்…
பரிமாணம் பெற்ற வாழ்க்கையில் கற்றவை எத்தனை!
கண்டவை எத்தனை!
பந்தயக் குதிரையாய் விரட்டியவர்களும்…
பகடைக்காயாக உருட்டியவர்களும்…
கேடயமாய்
ஏந்தியவர்களும்….
அவரவரின்
ஆதாயங்களுக்கு
ஆதாரமாக்கப்பட்டதை
உணர்ந்து தெளிவதற்குள்…
இங்கே
எல்லாமும்
முடிந்து கிடக்கிறது!
ஒடி ஓடி…
தேடித்தேடி…
வலிகளிலும்
போராடி போராடி…
இனி என்பது கேள்விக்குறியாய்…. முடிவின் அருகில் நின்று மௌனமாய் சிரிக்கிறது வாழ்க்கை!
பிடிபடாத மாயையை பிடித்து விடவும்…
அகப்படாத ஆதாரங்களை அடைந்து விடவும்…. சூரியனை
தொட்டுவிட முயன்று பொசுங்கிப்போன பீனிக்ஸாய் மாறிக் கொண்டிருக்கிறது…
என்…
துடிப்புகளும் தவிப்புகளும் பராக்கிரமங்களும் தேடித்தேடிச் சேர்த்த பெருமைகளும்!
எதார்த்தங்களை
உணராமல் போனதால்…
ஒவ்வொன்றையும் கேட்காமல் போனதால்… அறிவுரைகளை ஏற்காமல் போனதால்…
அனல்பட்ட
ரோஜா இதழ்போல்
சுருண்டு கொண்டிருக்கிறது நான் எனும்
என் அகந்தை!
உயிரின் இழைகள் அறுந்து கொண்டிருக்கும் போதுதான்
செய்த தவறுகள் சிலையாக்கிக் கொண்டிருக்கிறது உடலை!
துள்ளிக்குதித்த கால்கள்…
திமிறி எழுந்த தோள்கள்…
களமாடிய கரங்கள்… செய்வினையில் சுருண்டுபோன சேவலாய் கேட்பாரற்று கிடக்கிறது!
அனுபவித்து சொன்னவர்களின்
வார்த்தைகளை எல்லாம்
அலட்சியம் செய்ததால்..
அனுபவித்து அறிய வைக்கிறது
வலிகளும்…
வேதனையும்!
கை மூடி வந்தோம்…
கை விரித்துப் போகிறோம்…
கண் திறந்து வந்தோம்…
கண்மூடி போகிறோம்…
உயிர்ப்பெற்று வந்தோம்…
உயிர்ப்பிரிந்து போகிறோம்…
விதையில் இருந்து வளர்ந்த மரம்
பூத்து காய்த்து
காய்ந்து கருகிப்போவதுபோல்… மனிதன் எனும் நானும்
வாழ்க்கையின் ரகசியத்தை
உணர்ந்து கொண்டிருக்கிறேன்!
எழுதியது : பாவரசு. பாரதிசுகுமாரன்