சாவகச்சேரி வைத்தியசாலைக்கு நடைமுறைச் சாத்தியமாக செய்யக்கூடியது என்ன ?

எழுதியது : Dr முரளி வல்லிபுரநாதன்
சமுதாய மருத்துவ நிபுணர்

சாவகச்சேரி வைத்தியசாலையைக் காப்பாற்ற வெளிநாட்டில் வசிக்கும் தென்மராட்சியைச் சேர்ந்த வைத்தியர்கள் முன்வரவேண்டும் என்று அழைக்கிறார் டொக்டர் முரளி வல்லிபுரநாதன் ,

மேலும் அதற்கான காரணங்களை ஆராய்ந்து சமூகமாக கைகொடுக்க வேண்டியது எவ்வாறு என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

முதலில் சாவகச்சேரி வைத்தியசாலை ஏன் அபிவிருத்தி செய்யப்படவில்லை என்பதற்கான காரணம் என்ன என்பதை ஆராயத்தொடங்குவதாக அவரின் பார்வை தொடங்குகிறது.

மேலும் அவர் எழுதிய விடயங்களை இனி  வாசிப்போம்.  

சாவகச்சேரி வைத்தியசாலை ஏன் அபிவிருத்தி செய்யப்படவில்லை என்பதைப் பற்றி கடந்த காலத்தில் சுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரிவின் சிரேஷ்ட மருத்துவ நிபுணராக கடமை ஆற்றியவர் என்ற வகையில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.

இரு தசாப்தங்களுக்கு முன்னரேயே சாவகச்சேரி வைத்தியசாலை ஆதார வைத்தியசாலை வகை B என அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது. வகை பி வைத்தியசாலை ஒன்றில் இருக்கவேண்டிய அடிப்படை வசதிகள் இத்துடன் இணைக்கப்பட்ட அட்டவணையில் காணப்படுகின்றன. இதில் குறிப்பிட்டுள்ள வசதிகளில் முக்கியமாகச் சத்திரசிகிச்சைக் கூடம், மற்றும் அதி தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய பெளதீக மற்றும் சத்திர சிகிச்சை நிபுணர் ஆளணி வளங்கள் ஆகியன சாவகச்சேரி வைத்தியசாலையில் காணப்படவில்லை என்பது முக்கியமான குறைபாடாக உள்ளது. இவை அனைத்தையும் முழுமையாக இயக்குவதற்கு தற்போதுள்ள ஆளணியான 25 மருத்துவர்கள் போதாது என்பதையும் நாம் கருத்தில் எடுக்க வேண்டும்.

எவ்வாறு இந்த இழிநிலை ஏற்பட்டது என்று ஆராய்ந்தால் 2009 வரை போர் நடக்கும் காலத்தில் வட பகுதி வைத்தியசாலைகள் அனைத்தும் அபிவிருத்தி செய்யப்படாமல் இருந்தன என்பதும், அதன் பின்னர் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்திக்குரிய அழுத்தங்களை பிரயோகிக்காததால் 2010-2018 வரை மந்த கதியிலேயே அபிவிருத்திகள் இடம் பெற்றன என்பதும் வெளிப்படை

இப்போது தேர்தல் காலம் நெருங்கி விட்டதால் அனைத்து அரசியல்வாதிகளும் வாக்குகளுக்காகச் சாவகச்சேரி வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதாகப் ‘படம்’ போடுகிறார்கள். இவர்களில் சிலர் கடந்த காலத்தில் வைத்தியர்களிடம் கப்பம் கேட்டு அவர்களை நாட்டை விட்டுத் துரத்தியவர்கள் என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

ஊர் வைத்தியர்களும் பாத்திரவாளிகளே

2019 கோவிட், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார வங்குரோத்து ஆகியவற்றால் இலங்கை முழுமையும் வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தாமதப்பட்டு இருந்தது. பின்னர் வந்த ரணில் அரசாங்கம் பொருளாதார நிலையில் இருந்து நாட்டை மீட்டதாக உரிமை கோரினாலும் அதிகரித்த வரிகளை விதித்து வைத்தியர்களையும், வைத்திய நிபுணர்களையும் நாட்டை விட்டு ஆயிரக்கணக்கில் வெளியேறும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மருத்துவ நிபுணரும், சராசரியாக மூன்று மருத்துவர்களும் நாட்டை விட்டு வெளியேறுவதைப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

குறிப்பாகப் பெருமளவு சத்திரசிகிச்சை நிபுணர்கள், மயக்கமருந்தியல் நிபுணர்கள், மற்றும் குழந்தை வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், பெரிய வைத்தியசாலைகளே சத்திரசிகிச்சை நிபுணர்கள் தட்டுப்பாடு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மைக்காலத்தில் சாவகச்சேரிக்குக் குறித்த நிபுணர்களை நியமிப்பது குதிரைக்கொம்பாகவே இருக்கப்போகிறது.

எனவே இந்த இழிநிலை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு ஏற்பட்டதற்கு, தென்மராட்சியில் இருந்து வெளியேறிய மருத்துவர்களும் ஒரு காரணம் என்பதை அவர்கள் நேர்மையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

படம் போடுவோர்.

அதே நேரம் சமூக ஊடகங்களில் ‘படம்’ போடுவோரால் எந்த நிரந்தர மாற்றமும் சாவகச்சேரியில் நிகழப்போவதில்லை. இவர்கள் பொழுதுபோக்குக்காகக் ‘கமெண்ட்ஸ்’ போடுவார்கள். மற்றப்படி தமது Youtube வியாபாரத்தைப் பெருக்குவார்களே தவிர உருப்படியான எதையும் செய்யப்போவது இல்லை. இதைவிட மருத்துவர்களைக் குறை சொல்வோர் தமது பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிக் கொண்டு வைத்தியர்கள் மாத்திரம் இலங்கையில் இருக்க வேண்டும் என்று குதர்க்கம் பேசுவார்கள்.

கடந்த காலங்களில் இடம் பெற்றதாக கூறப்படும் தவறான முகாமைத்துவம் மூலம் நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் அதற்குரிய நிவாரணமும் முகநூல் பதிவுகளினால் கிடைக்கப் போவதும் இல்லை.

நடைமுறைச் சாத்தியம்

காலி முதலான தென் பகுதியில் வசிக்கும் வைத்தியர்களைக் கட்டாயப்படுத்திச் சாவகச்சேரியில் வேலை செய்ய வைத்தால் அவர்களும் மனிதப் பிறவிகளாக வீட்டுக்குப் போகத் துடிப்பார்கள் மேலும் சாவகச்சேரியின் அபிவிருத்தியில் அவர்களுக்கு ஆர்வமும் இருக்காது. மக்களுக்கு வைத்தியர்களோடு சரளமாக உரையாடுவதற்கும் முடியாது.

மேலும் தற்போதைய அரசாங்கத்தின் சம்பளக் கொள்கையின் படி- சர்வதேச நாணய நிதியத்தின் கட்டுப்பாடுகளை மீறி- அண்மைக் காலத்தில் வைத்தியசாலைகளில் தற்போது உள்ள ஆளணியை எவரும் அதிகரிக்கப் போவதில்லை.

எனவே தென்மராட்சியைச் சேர்ந்த பல வைத்தியர்களும், வைத்திய நிபுணர்களும் வெளிநாட்டில் வசதியாக இருந்துகொண்டு, ‘நாங்கள் 50 பவுண் அனுப்பினோம், 100 டொலர் அனுப்பினோம் ஏன் இன்னமும் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யவில்லை?’ என்று சமூக ஊடகங்களில் கேட்பதை விடுத்து, உங்களுடைய ஊர் வைத்தியசாலையில் சிறிது காலம் வேலை செய்யலாம் அல்லவா?

குறிப்பாக இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இலவச மருத்துவக் கல்வியைப் பயின்ற பின்னர் இப்போது வெளிநாடுகளில் வேலை செய்யும் தென்மராட்சியை சேர்ந்த மருத்துவர்களும் சத்திரசிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட விசேட வைத்திய நிபுணர்களும் சிறிது காலமாவது சாவகச்சேரியில் வேலை செய்ய முன்வரவேண்டும்.

ஏனைய மாவட்டங்களில் யுத்த காலத்திலும் அதற்கு பின்னரும் பல வைத்தியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் தமது சொந்த மண்ணை அபிவிருத்தி செய்வதற்காக வெளிநாட்டில் இருந்து வந்து சுகாதார அமைச்சின் அனுமதியுடன் அரசாங்க வைத்தியசாலைகளில் வேலை செய்திருக்கிறார்கள். எனவே நான் முன்மொழிவது புதிய ஒரு விடயம் அல்ல.

மேலும் “நாங்கள் அனுப்பிய நிதிக்கு என்ன நடந்தது?” என்று மற்றவர்களைக் கேள்வி கேட்பதை விடுத்து, மருத்துவர் அல்லாதோரிடம் நிதியை சேகரிக்கும் பணியைக் கையளித்துவிட்டு, நீங்கள் நேரடியாகவே வந்து உங்கள் பார்வையின் கீழ் நிதியைப் பயனுள்ள விடயங்களுக்குச் செலவழிக்கவும் முடியும்.

கோரிக்கை

எனது பணிவான கோரிக்கை ஒவ்வொரு தென்மராட்சியைச் சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்யும் வைத்தியரும் மூன்று மாதம் ஆவது சாவகச்சேரியில் வந்து வேலை செய்தால் தற்போதைய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையை அதற்குரிய வசதிகளுடன் விரைவாக இயங்க வைக்க முடியும்.

இதை விடுத்து ‘கடந்த காலத்தில் என்ன நடந்தது?’ என்று மற்றவர்களைக் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. முகநூல் போராளிகளுக்கு நான் கூற விரும்புவது உங்களுடைய குற்றசாட்டுகளை உண்மையான ‘ப்ரொபைல்’ மூலம் ஆதாரத்துடன் வெளியிடுங்கள். ஆனால் அது மட்டும் மாற்றத்தை எற்படுத்தாது. சமாந்தரமாகச் சட்ட மற்றும் ஏனைய நடவடிக்கைகள் மிகவும் அவசியம்.

தற்போது உள்ள கேள்வி சாவகச்சேரியை சேர்ந்த வெளிநாட்டு வைத்தியர்கள் எனது கோரிக்கையை சவாலுக்கு உட்படுத்தப் போகிறார்களா அல்லது ஏனைய மாவட்ட வைத்தியர்களை போலத் தியாகத்தை செய்ய முன்வருவார்களா என்பது தான்?

நன்றி

12.7.2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *