உள்ளத்தில் ஊனமில்லை..!
உள்ளத்தில் ஊனமில்லை!
உள்ளத்தில் ஊனமில்லை!
உன்பங்கைக் கொஞ்சமிடு!
வள்ளல்போல் இல்லாமல்
வாட்டம்தீர் ஏழைகற்கு!
எள்போன்று தந்திடுதல்
இன்னல்கள் தீர்த்திடாது!
தள்ளித்தான் துன்பநிலை
தானாகச் சென்றிடாது!
ஈதல்சார் இன்பமும்காண்!
ஈயாரின் இம்மையும்வீண்!
சாதல்தான் தீர்வுயென்று
சார்ந்தோரின் சிக்கலறு!
பாதங்கள் நேர்வழியைப்
பார்க்கத்தான் கற்றுகொடு!
மாதர்தம் சிந்தனைகள்
மாற்றம்சார் உத்தியைச்சொல்!
மூப்புற்றோர் இன்பமுற
முப்போதும் நன்மையைச்செய்!
காப்பாற்றிப் பேணுவதைக்
கண்டிப்பாய் நித்தமும்செய்!
தோப்பில்லா ஒற்றைமரம்
தொல்லைக்கு உட்படுமே!
சாப்பாடு கிட்டிடாரைச்
சந்தர்ப்பம் பாழ்படுத்தும்!
தர்மத்தில் நிற்பவர்கள்
தாழ்ந்தென்றும் போவதில்லை!
துர்புத்தி கொண்டவர்கள்
தொண்டாற்றி வாழ்ந்ததில்லை!
வர்ணத்தில் வெண்ணிறமே
வாயாற வாழ்த்துபெறும்!
கர்வத்தை நீக்கியேநல்
கர்மத்தில் தேரிடுவோம்!
~கவிவேந்தர் டாக்டர் சோமதேவன் சோமசன்மா
ஜொகூர்,மலேசியா