வீரமங்கை வேலு நாச்சியார்..!

⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️

வீரமங்கை
வேலுநாச்சியார்
பிறந்த தினம்

படைப்பு கவிதை ரசிகன்
குமரேசன்

⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️

ஆயிரத்தி
எழுநூத்தி முப்பது….. செல்லமுத்து
விஜய ரகுநாத சேதுபதிக்கும்
தாத்தா நாச்சியாருக்கும்
சிவகங்கையில்
ஒரு “மங்கை”பிறந்ததாக சொன்னார்கள்…
காலம் சொன்னது
பிறந்தது “மங்கை”யல்ல
“வேங்கை” என்று…..

இறந்தால் “கொல்லி போட”
ஆண் வாரிசு வேண்டும் என்று
அடம்பிடிக்கும்
அப்பாக்களுக்கு மத்தியில்
உன் அப்பா தான்
“நாட்டையே ! ஆள்வதற்கு”
பெண் வாரிசே!
போதும் என்று முடிவெடுத்தார்….

பெற்றது பெண் பிள்ளை….
உன் அப்பா
உன்னை வளர்த்தது
ஆண் பிள்ளையாக…

குதிரை ஏற்றத்தில்
உன்னை வெல்ல
எந்தக் குதிரையாலும்
முடியவில்லை…..

உன் வாள் வீச்சில்
தப்பிக்க
அந்தக் காற்றுக்கும்
வழி தெரியவில்லை….

நீ சிலம்பு
சுற்றும் வேகத்தைக் கண்டு
பூமிக்கும்
சிலிர்த்துதான் போயிருக்கும்….

மனிதர்கள்
மொழியை
கற்றுக் கொள்வார்கள்
அந்த மொழியே!
உன்னிடம் தான்
கற்றுக் கொண்டது
ஆம்…..!
உனக்கு
“ஆறு மொழிகள் “
தெரியும் அல்லவா…!

நாட்டுக்கே
ராணியாக இருந்தாலும்
வீட்டுக்கு
மனைவி என்பதால்
முத்துவடுகநாதர் தேவரை மணமுடித்து
மனைவியானாய்……

மன்னன் என்றும் பாராமல்
உன் கணவன்
வயலில் இறங்கி
விவசாயம் செய்ததால்
சிவகங்கை
பச்சை வயல்வெளி
பட்டொளி வீசியது…
அது
உறுத்தியது
வெள்ளையர்களின் விழிகளை…

நவாப் முகமது அலி
கப்பம் கட்டச் சொல்லி
சிறுபடை ஒன்றை அனுப்பி
எச்சரித்தான்…..

“கப்பம்” கட்ட முடியாது
உனக்கு
“கல்லறை” தான்
கட்ட முடியும் என்று
பெரும்படையுடன்
சென்று போரிட்டு வென்று
வெற்றி மாலை சூடினான்
உன் கணவன்….

நேருக்கு நேராய்
போரிட்டு
“நெஞ்சில்” குத்திக்கொள்ள
வக்கில்லாத அலி
“புறமுதுகில்”
குத்திக்கொள்ள
சூழ்ச்சி செய்தான்…..

குலதெய்வக் கோவிலில்
சிலருடன் இருந்தபோது
முற்றுகையிட்டு
உன் கணவன் வாழ்க்கையை
முடித்து வைத்தான் ……

நீ நாட்டை இழந்தாலும்
நம்பிக்கை இழக்கவில்லை…..
கணவனை இழந்தாலும்
கடமையை இழக்கவில்லை
மருத சகோதரர்கள்
யானைப்படையாக
சிவகங்கை மக்கள்
குதிரைப்படையாக
உன்னுடன் வர
நீ சிலிர்த்து எழுந்தச் சிங்கமாய்
போரிடச் சென்றாய்…..

உன் வாள் வீச்சுக்கு முன்
ஆங்கில ஓநாய்கள்
வாலாட்ட முடியவில்லை….
மதம் பிடித்த
யானையாகிய
மருதசகோதரர்களுக்கு முன்னால்
பீரங்கி வண்டியும்
மண்டியிட்டு பின்வாங்கியது…..

வேங்கையாய் பாய்ந்த
சிவகங்கை மக்களுக்கு
குண்டு மழை
குண்டுமல்லி மழையானது
போராட்டத்தின் முடிவில்
வெற்றி மாலை
உன் கழுத்தை தேர்ந்தெடுத்தது….
மக்கள் ராணியாக
உன்னை தேர்ந்தெடுத்தனர்…

பெண்மையால்
என்ன செய்ய முடியும் என்று
கேட்பவர்களுக்கு
உன் வரலாறு ஒரு பேரிடி….

பெண்மையை தாழ்வாக
நினைப்பவர்களுக்கு
உன் வரலாறு
ஒரு சாட்டையடி ….

ஆங்கிலேயரை எதிர்த்த
முதல் பெண் மட்டுமல்ல
வீரத்தைப்
பெண்களுக்கு ஊட்டிய
முதல் பெண்ணும் நீயே…! வாழ்க உனது புகழ் ! வளர்க உனது பெருமை ! *கவிதை ரசிகன்*

⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *