இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை மீள அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்| வடமாகாண ஆளுநர் வேதநாயகன்
இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாடு திரும்ப செய்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை இலங்கை – இந்தியா அரசுகளுக்கிடையே கைச்சாத்திட வேண்டும் என வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (22) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில், கடந்த காலங்களில் 3,34,797 இலங்கையர்கள் அகதிகளாக இந்தியா சென்றுள்ளதாகவும், தற்போதைய நிலையில் 58,104 பேர் தமிழகத்தின் 103 முகாம்களில் வசிக்கின்றனர் என்பதும் குறிப்பிடப்பட்டது. அவர்களில் 50,620 பேர் வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களாகும்.
2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை 14,531 அகதிகள் நாடு திரும்பியிருப்பதாகவும், மீண்டும் நாடு திரும்ப விரும்பும் அகதிகள் சவால்கள் எதிர்கொள்வதாகவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, அவர்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், தமது பூர்வீக இடங்களை அடையாளம் காணுவது கடினமாக இருக்கலாம்.
இவ்வமைப்பை எளிதாக்க, நாடு திரும்ப விரும்புவோரின் பட்டியல் தயாரிக்கப்பட்ட பின்னர், அவர்கள் குடியுரிமை மற்றும் வாழ்வாதார வசதிகளை உறுதி செய்ய அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வட மாகாண ஆளுநர், அரசாங்கத்தின் கவனத்திற்கு இந்த விடயங்களை கொண்டு செல்லும் வகையில் கொள்கை ரீதியான ஆவணங்கள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் வட மாகாண பிரதம செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், சமுர்த்தி பணிப்பாளர்கள், மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.