வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு கடூழிய சிறை

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளரான சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அத்துடன் பிரதிவாதிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டவிரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.